வடக்கு செல்லும் வெளிநாட்டவருக்கான கட்டுப்பாடு தமிழர்களை பிரிவினைவாதத்திற்கு தள்ளிவிடும் : ஜே.வி.பி.

வடக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சில் பதிய வேண்டுமென்ற அரசின் அறிவிப்பானது தமிழ் மக்களை மேலும் பிரிவினைவாதத்திற்கு தள்ளி விடும் செயற்பாடாகும் எனத் தெரிவிக்கும் ஜே.வி.பி. நாட்டில் சர்வாதிகார பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஜனநாயக சுதந்திரமான நாடு என்றால் இங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எங்கும் சுதந்திரமாக நடமாடும் உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு தடை விதிக்கப்படுகிறது.

விசேடமாக வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டுமென்றால் பாதுகாப்பு அமைச்சில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற அதேவேளை வடக்கையும்  தமிழ் மக்களையும் ஒதுக்கும் செயலாகும்.

அரசின் இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளால் நாட்டுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள், குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கும். ஏற்கனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உல்லாச பிரயாணத்துறையை அபிவிருத்தி செய்யவும் வெளிநாட்டவர்கள் இங்கு வருவதை ஊக்குவிக்கவும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அரசு கூறுகின்றது. ஆனால் வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கு பதிவு செய்ய வேண்டுமென்கிறது. அப்படியானால் அரசின் உண்மையான கொள்கைதான் என்ன?

அரசிடம் கொள்கை எதுவும் இல்லை. மாறாக ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள எதனையும் செய்யலாம் என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றது. அத்தோடு நாட்டை சர்வாதிகார பொலிஸ் ஆட்சியை நோக்கி நகர்த்தி வருகின்றது என்றும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply