ரயில் சேவையை நவீனமயப்படுத்த 1200 மில்லியன் டொலர் முதலீடு 2016இல் மின்சார ரயில் சேவை
யாழ் தேவி ரயில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் காங்கேசன்துறை வரை பயணம் செய்யும். கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவையும் டிசம்பரில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புதிய ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ரயில் சேவையை நவீன மயப்படுத்த புதிதாக ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் என்பன கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய ரயில்வே பொது முகாமையாளராக விஜய குலதுங்க நேற்று காலை சுப நேரத்தில் பதவி ஏற்றார். ரயில்வே திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத அனுஷ்டா னங்களுடன் அவர் பதவியை பொறுப்பேற்றார். நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை புதிய ரயில்வே பொது முகாமையாளராக விஜய குலதுங்கவை நியமிக்க அனுமதி வழங்கியது.
ரயில்வே திணைக்களத்தில் 32 வருடங்கள் சேவையாற்றியுள்ள குலதுங்க பல்வேறு பதவிகள் வகித்துள்ளதோடு இறுதியாக போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றினார்.
பதவி ஏற்பு நிகழ்வின் பின் கருத்துத் தெரிவித்த ரயில்வே பொது முகாமையாளர், மஹிந்த சிந்தனையின் கீழ் அரசாங்கம் எதிர்பார்க்கும் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள், ஊழியர்கள் ஆகியோர் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ரயில்வே திணைக்களத்திலுள்ள 100க்கும் அதிகமான ரயில் தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்குவர் என்று எதிர்பார்க்கிறேன். அவர்களது பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த தயாராக உள் ளேன்.
ரயில்வே சேவையை மேம்படுத்த அரசாங்கம் பெருமளவு நிதி முதலீடு செய்துள்ளது. இதன் கீழ் ரயில் பாதைகளை மறுசீரமைக்கவும் புதிதாக ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தருவிக்கவும் உள்ளோம். இது தவிர மேலும் பல பாரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மக்களுக்கு பாதுகாப்பான வசதியான சேவை வழங்குவதே எமது நோக்கமாகும்.
வடபகுதிக்கான ரயில் சேவையை ஆரம்பிப்பதற்காக 2009ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே நான் அதற்கான திட்டப் பணிப்பாளராக அங்கு சென்று பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தேன். யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை சேவையை ஆரம்பித்துள்ளது. யாழ் – காங்கேசன் துறை மற்றும் மடு – தலைமன்னார் இடையி லான ரயில் பாதைகள் ரயில் நிலையங்கள் என்பன துரிதமாக நிர்மாணிக்கப்படுகிறது. டிசம்பரில் அப்பகுதிகளுக்கான சேவை ஆரம்பிக்கப்படும்.
2016இல் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ரயில் சேவைகளுக்கு செலவிடும் தொகை குறைவடையும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply