தண்டனை பெற்ற தலைவர்களில் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே 21 நாளில் விடுதலை பெற்றுள்ளார்
ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 27–ந் தேதி சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று இன்று அவர் விடுதலை ஆக உள்ளார். அவர் மொத்தம் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்–மந்திரி லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜாமீன் பெறுவதற்கே கடுமையாக போராடினார்.
இதனால் லல்லு பிரசாத் யாதவ் சுமார் ஓராண்டு வரை ஜெயிலுக்குள் இருக்க வேண்டியதாகி விட்டது. ஒரு வருட இழுபறிக்கு பிறகே அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
அரியானா மாநில முன்னாள் முதல்–மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு மாதமாக ஜெயிலில் இருந்த அவர் தன் உடல்நலத்தை காரணம் காட்டித்தான் ஜாமீன் பெற முடிந்தது.
இதையடுத்து அவர் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். தற்போது அவர் மீண்டும் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமாக ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் பெற முயன்று தோல்வி அடைந்த அவர் ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்தார்.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சுரங்கத் தொழில் துறையில் கொடி கட்டி பறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. அதில் முறைகேடுகள் செய்ததாக அவர் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். பல தடவை போராடியும் அவருக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் கடந்த 2½ ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டி ஜெயிலுக்குள் தவித்தப்படி உள்ளார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உரிமையாளர்களும் இதே போல் ஜாமீன் கிடைக்காமல் சுமார் 3 ஆண்டாக ஜெயிலுக்குள் இருக்கிறார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அது போல கனிமொழி எம்.பி.க் கும் இதே வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
டெல்லி திகார் ஜெயிலில் ஓராண்டு இருந்த பிறகே அவர்கள் ஜாமீன் பெற முடிந்தது. ஆனால் இந்த தலைவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதா 21 நாட்களில் ஜாமீன் பெற்று வெளியில் வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply