விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இலங்கை அப்பீல்
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை விலக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் செய்கிறது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தடை விதித்தன.
இதில், 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், லக்சம்பர்க் நாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை அந்த கோர்ட்டு விசாரித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை நீக்கி கடந்த 16-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவு, 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும், ‘விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை, கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதுபற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம்’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இலங்கை 2 மாதங்களில் அப்பீல் செய்ய முடியும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து அகற்றும் இந்த தீர்ப்பு, இலங்கையில் உள்ள ராஜபக்சே அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அது அப்பீல் செய்ய தீர்மானித்திருக்கிறது.
இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக தனது தூதர் ரோட்னி பெரைராவை இலங்கை ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்டிராஸ்பர்க் (கிழக்கு பிரான்ஸ்) நகருக்கு இன்று (திங்கட்கிழமை) அனுப்புகிறது. அங்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார். அப்போது அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக அங்குள்ள 2 முக்கிய குழுக்களான வெளியுறவு குழு, பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஆதரவை பெற முயற்சி எடுப்பார் என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அவர், ஐரோப்பிய கவுன்சிலின் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply