தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை: ஜெயலலிதா

தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்’’ என்று இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக்கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்த பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்த பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களை பற்றியோ, துயரங்களை பற்றியோ, சோதனைகளை பற்றியோ, வேதனைகளை பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்த தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை; மனம் தளரப்போவதில்லை.

என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தாய்மார்களும், பொதுமக்களும், ஆதரவாளர்களும், தோழமை கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக திருக்கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்தி கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன்.

என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply