கூட்டமைப்பின் முயற்சிக்கு ஹக்கீம் துணை போகமாட்டார்
தமிழ் மக்களைப் போல் முஸ்லிம்களையும் ஏமாற்றி வடக்கு கிழக்கினை இணைந்த புதிய அத்தியாயமொன்றினை ஆரம்பிக்கவே கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டு சேர முயற்சிக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிக்கு ஹக்கீம் துணை போகமாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, புலிகள் மீதான தடை நீக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குமே மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய சுதந்திர முன்னணியால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான விமல்வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கின் முக்கிய கட்சியாக இருந்தாலும் எமக்கு இவர்கள் பெரியவர்கள் அல்ல.
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் செவிசாய்க்க வேண்டிய அவசியமும் இல்லை. வடக்கில் இருந்த சிங்களவர்களை வெளியேற்றியதுடன் தற்போது பௌத்த விகாரைகளை அகற்றும் செயற்பாடுகளை கூட்டமைப்பு செய்கின்றது. இவை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்விடயங்களில் ஏனைய கட்சிகளைப்போல் நாமும் வாய்மூடி செயற்படுவது சிங்கள பௌத்த இனத்தவருக்கு நாம் செய்யும் துரோகமாகும். அதற்காகவேனும் நாம் இவர்களின் செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.
கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி
அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது புதிய திட்டத்தினை வகுத்து வருகின்றது. முஸ்லிம் காங்கிரசுடனான புதிய பயணத்தினை ஆரம்பித்து தமது எதிர்பார்ப்பினை நிறைவு செய்யவே முயற்சிக்கின்றது. வடக்கில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வந்த பின்னர் எம் மீதான தவறான கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைத்து விட்டனர். அதேபோல் தற்போது முஸ்லிம் சமூகத்தினையும் ஏமாற்றி வடக்கு கிழக்கினை ஒன்றிணைத்து தமது ஈழத்திற்கான புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்கவே திட்டம் தீட்டுகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணியின் பின்னணியில் தனி நாடு, தனி அதிகாரம், தனி ஆட்சி என்ற திட்டமே உள்ளது. அதற்கு இடம்கொடுப்பது நாட்டிற்கும் அரசுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.
ஹக்கீம் சரியான முடிவு எடுப்பார்
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடனான கூட்டணியிற்கு ஒருபோதும் துணை போகாது என நம்புகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால சோகங்கள் வீழ்ச்சிகள் அனைத்தையும் தலைவர் ரவூப் ஹக்கீம் நன்கு அறிந்துள்ளார். அவர்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியமைக்கும் தம்மை பலப்படுத்தியமைக்கும் அரசே காரணம். எனவே, ஹக்கீம் பகுத்தறிவு உள்ளவர் எனின் புத்திசாலித்தனமாக யோசிப்பாராக இருந்தால் ஒருபோதும் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டார் என நான் நினைக்கின்றேன்.
புலிகளின் தடை நீக்கம் எதிரணிக்கே மகிழ்ச்சி
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டமை எம்மால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமே. எனினும் இத்தடை நீக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அன்று தொடக்கம் இன்று வரையில் ஆயுதக்கொள்கைகளை ஆதரிக்கின்றனர். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினரும் ஆரம்பத்தில் இருந்தே விடுதலைப்புலிகளை பாதுகாத்து வருகின்றனரே தவிர ஒரு சந்தர்ப்பத்திலேனும் எதிர்க்கவில்லை. குமரன் பத்மநாதன் போன்றவர்கள் அன்று விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டாலும் இன்று அவர்களை நாம் மாற்றி எமது பக்கம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பு என்பன எம் மீது குறை சொல்லி அவர்கள்தான் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply