அரச துறையை தனியாருக்கு தாரைவார்த்தது ஐ.தே.கட்சியே : ஜனாதிபதி

‘யழிபுபுதுவ’ மீள் புத்தெழுச்சி கொள்கைத் திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரச துறையை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமக்கிருந்த பொறுப்பினைத் தட்டிக் கழிக்கப் பார்த்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். தனியார் துறை மீதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஏழு இலட்சமாகவிருந்த அரச ஊழியர் தொகையை மூன்று இலட்சமாக குறைக்க அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்நிலையை மாற்றி அரச ஊழியர் தொகையை 15 இலட்சமாக அதிகரித் ததாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தீர்மானத்தை இன்று சிலர் மறந்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி மாவட்ட பொது சேவை உத்தியோகத்தர்கள் 1500 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் வைபவம் நேற்று கொக்கல முதலீட்டுச் சபை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வரவு செலவு திட்டத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கு முன்பு அரசாங்க பொது உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி முடிப்பதே எமது திட்டம். அதற்கிணங்கவே காலி மாவட்டத்திற்கும் 6500 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக இன்று 1500 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறானதொரு சலுகையின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுவது நீங்கள் எதிர்பார்த்திராதது.

நாட்டில் தற்போது 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் உள்ளனர். 2002 – 2004 ற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ‘யழிபுபுதுவ’ திட்டத்தின் கீழ் அன்று ஆட்சியிலிருந்தவர்கள் ஏழு இலட்சமாகவிருந்த அரச ஊழியர் தொகையை மூன்று இலட்சமாக குறைப்பதற்குத் திட்டமிட்டனர்.

அதற்கான ஒரு ஆலோசனையை முன்வைத்து அதனை நிறைவேற்றி அரச ஊழியர்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

தனியார் துறைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் பொறுப்பை வழங்கி விட்டு அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயற்சித்தனர். பொறுப்புகளிலிருந்து தாம் விலகி பொறுப்பற்றவர்களாக தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

அந்த நிலையை நாம் மாற்றினோம். நாம் தனியார் துறையினரை விட அரச துறையின் மீது அதீத நம்பிக்கை வைத்தோம். இது எமது அரசாங்கத்தின் ஆரம்ப காலத்திலும் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்றோர் கடைப்பிடித்த கொள்கையாகும். தனியாரை விட அதிகமான சேவையை வழங்க அரச துறையினரால் முடியும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே நாம் இன்று அரச ஊழியர்கள் தொகையை 15 இலட்சமாக அதிகரித்துள்ளோம்.

எனினும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாவிட்டால் இந்த அதிகரிப்பு பயனற்றதாகிவிடும் என்பதை சகலரும் உணரவேண்டும். மக்களுக்கான சேவையை வழங்கும் போது அதற்கான சிறந்த சூழலையும் காரியாலய வசதிகளையும் தொழில் நுட்பம் உட்பட ஏனைய வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது முக்கியம் என்பதை நாம் உணர்ந்தோம். அதற்கிணங்கவே சகல வசதி வாய்ப்புக் களையும் அரச சேவைக்குப் பெற்றுக் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் மக்கள் சேவையை நீங்கள் அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டியது அவசியம். அதன் மூலம் மேலும் நாட்டைப் பாதுகாத்து நாட்டை மென்மேலும் முன்னேற்ற முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply