போர் நிறுத்தத்தை மீறி இந்தியா அத்துமீறலில் ஈடுபடுவதாக பாக். பாராளுமன்றம் கண்டனம்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்திய ராணுவத்தினர் மட்டுமின்றி, எல்லை ஓர கிராம மக்களும் உயிரிழப்பை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், இதை மறைத்து, இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நவாஸ் ஷெரீபின் வெளி விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலும், சர்வதேச எல்லையிலும் எவ்வித தூண்டலும் இல்லாமலேயே, கண்மூடித்தனமாக, போர் நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் 13 பாகிஸ்தானியர் பலியாகி விட்டனர். பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்காக, தேசிய சபை (பாராளுமன்றம்) கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இந்த பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்புமாறு பாகிஸ்தான் அரசை இந்த சபை கேட்டுக் கொள்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப, காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளை வலியுறுத்த வேண்டும். ‘இந்திய ஆக்கிரமிப்பின்’ கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நிலைமை குறித்து இந்த சபை கவலை கொள்கிறது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில், பாகிஸ்தான் ராணுவ மந்திரி காவஜா அசீப் பேசியதாவது:-

எந்த அத்து மீறலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் பெற்றது, பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா நினைத்தால் அது தவறாகி விடும்.

நாங்கள் எடுக்கும் அமைதிக்கான முயற்சியை எங்களது பலவீனமாக கருதக்கூடாது. எங்களால் உறுதியான பதிலடி கொடுக்க முடியும். இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள். எனவே, அவசரப்பட்டு எதுவும் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, சர்வதேச எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இந்தியா பதுங்கு குழி அமைத்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லம் குற்றம் சாட்டினார்.

இப்படி பதுங்கு குழி கட்டுவது, இரு நாடுகளுக்கும் இடையே 2010-ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும், எனவே, பதுங்கு குழி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply