எதற்கும் அஞ்சி முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுக்காது – ஜனாதிபதி தேர்தல் குறித்து ஹக்கீம்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை எக்கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் எதற்கும் அஞ்சி முடிவெடுக்காது. கட்சி கூட்டாகவே முடிவெடுப்பதுடன் அது சமூக நலன் சார்ந்த முடிவாகவே அமையும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல். அப்துல் மஜீதின் பதவிப்பிரமாண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதிமேயராக அப்துல் மஜீத் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் மாநகர மேயர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

மாநகர சபை உறுப்பினர் அப்துல் மஜீத் நிகழ்வின் ஆரம்பத்தில் நீதி அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் பிரதி மேயராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.  அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்;

முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அரசியலில் இன்றைய காலகட்டம் மிக நெருக்கடியானதாகவேயுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கிய இக்கண்டத்தைத் தாண்டினால் பெரியதொரு சாதனை படைத்ததான நிலைமையே தோன்றும்.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் எவ்வளவு குறைவாகப் பேசுகின்றதோ அவ்வளவுக்கு நல்லது என்ற நிலைமையுமுள்ளது.

இருப்பினும் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவுக்கு வந்தாக வேண்டும். ஒரு மாதம் தாமதிப்பது கூட சிலருக்கு சிக்கலான விடயமாகவேயிருக்கும்.

அரசு – எதிரணி

அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியும் இப்போதே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே சில முடிவுகளை தாங்களே எட்டிவிட்டதைப் போல் பேசுவது மிக அபத்தமான செயல் மட்டுமன்றி ஆபத்தான விடயமுமாகும். இந்த விடயத்தில் நிதானம் பக்குவம் மிக அவசியமாகும்.

ஒரு விடயம்

ஒரு விடயத்தில் நாம் தெளிவு காண வேண்டும். எமக்குத் தேவை ஒரு பாராளுமன்றத் தேர்தலேதான். ஜனாதிபதித் தேர்தலை நாம் கேட்கவில்லை.

தேர்தலை இரு வருடங்கள் முன் கூட்டி நடத்துவது ஜனாதிபதிக்குத் தேவையாகவிருக்கலாம். ஆளும் பிரதான கட்சியின் தேவையாகவுமிருக்கலாம். இது அரச கூட்டுக்கட்சிகளின் தேவையுமல்லவென்பதும் இப்பொழுது அம்பலமாகியுள்ளது.

எந்தக்குதிரை

எனவே, தேர்தலில் எந்தக்குதிரையை வெல்ல வைப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமாகக்கூடி முடிவெடுக்க வேண்டும்.

இத்தேர்தலில் நமக்கு சமூகத்திற்காகப் பேரம் பேசும் ஒரு விடயம் மட்டுமேயுள்ளது. திறந்த மனதோடு ஒளிவில்லாமல் பேச வேண்டும். தலைமையை சந்தேகிப்பதென்பது பாவமான விடயமாகும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக முடிவெடுக்கும். எதற்கும் அஞ்சி முடிவெடுக்காது. எடுக்கப்போகும் முடிவு சமூகம் சார்ந்த முடிவாகவே அமையும்.

சமூக தளங்களில்

ஆனால், சமூக வலைத்தளங்களில் இது விடயமாக வேண்டுமென்றே திரித்துக்கூறப்பட்ட விடயங்கள் ஊகங்களாகவும் தாராளமாகவும் வெளியாகின்றன.

அதிலும் வேண்டுமென்றே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைச் சிலர் கொச்சைப்படுத்தி எழுதுகின்றனர். ஏற்கனவே சோரம்போன தலைமையாக சித்தரிக்க வேண்டுமென்பதற்காக எழுதிக்கொடுத்து பிரசுரிக்கும் செய்திகளாகவே இணையத்தளச் செய்திகளுள்ளன.

அரசு

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதற்கு அரசும் அவசரப்படுகின்றது என்றாலும் முஸ்லிம் காங்கிரசுக்கு அவசரமில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போன கட்சியல்ல. பலமான வாக்கு வங்கியுடனுள்ள கட்சி நிதானம் பக்குவமிழந்து வாய்ப்பை இழக்க வேண்டிய அவசியமில்லை. சரியான வியூகங்களை வகுப்போம். துணிவோடு வெற்றி காண்போம்.

முடிவுகளைச் சரியாக எடுத்து அதைச் சந்தைப்படுத்துவதிலும் வெற்றி காண்போம். முஸ்லிம்கள் போடு காய்களாக இருக்க முடியாது. போஸ்டர்கள் ஒட்டுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப்போடவும் முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply