அமெரிக்காவில் மாணவியை சுட்டுக்கொன்ற மாணவன்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சீட்டில் நகரம் அருகே மாரிஸ் வில்லே பில்சக் என்ற இடத்தில் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை 10.40 மணி அளவில் இடைவேளையின் போது மாணவர்கள் பள்ளியில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு சென்றனர். அங்கு உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மாணவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். அதில் அங்கிருந்த மாணவி ஒருவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.மேலும் சிற்றுண்டி சாலையில் 4 மாணவர்கள் மீதும் குண்டு பாய்ந்தது. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்கள், 2 பேர் மாணவிகள்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மாணவனை தேடினர்.

அவனை காணவில்லை. இறுதியில் பள்ளி வளாகத்தில் அவன் தனது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தான். எனவே அவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சக மாணவ–மாணவிகளை சுட்டுக் கொன்ற மாணவன் பெயர் ஜெய்லீன் பிரை பெர்க் என தெரிய வந்தது.

அவன் 9–வது வகுப்பு படித்து வந்தான். கால்பந்து அணியில் இடம் பெற்று இருந்தான். எனவே, அவன் பள்ளியில் மிகவும் பிரபலமாக விளங்கினான். அவன் எதற்காக துப்பாக்கியால் சுட்டான் என தெரியவில்லை.

அவன் சுட்டதில் 2 பேர் உறவினர்கள். அமெரிக்க பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 90 சம்பவங்கள் நடந்துள்ளன.

கானடிகட் சாண்டி ஹுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பள்ளி குழந்தைகளும், 6 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டில் இப்பகுதியில் மட்டும் 2–வது தடவை இது போன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply