பால் விலை உயர்வை கண்டித்து 3–ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்: கருணாநிதி அறிவிப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஏழையெளிய நடுத்தர குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக பால் விலையை லிட்டருக்குப் பத்து ரூபாய் உயர்த்தியுள்ளது. அத்துடன், மின்வெட்டு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை விடும் அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்து மக்கள் கருத்துக் கேட்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளது.கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையில் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும், அரசின் சார்பில் எவ்வித நிவாரணங்களும் இதுவரை அறிவிக்கப்பட வில்லை.

தமிழக அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும், பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வரும் 3–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் “ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு” நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply