முரளிதரன் எம்.பி அமைச்சராக நியமனம் அபிவிருத்தி முனைப்புப் பெறும்போது ஆயுதம் தாமாகவே கீழே விழும் : ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு கபினட் அந்தஸ்தற்ற அமைச்சராக நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெறுவதற்கு சற்று முன்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரனுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டாயிரம் பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் மேற்படி இரண்டாயிரம் பேரும் ஜனாதிபதியிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஏ. எச். எம். பெளஸி, டி. எம். ஜயரட்ன, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ் தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்து வப் பத்திரத்தை வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்ததாவது :- அபிவிருத்தி முனைப்புப் பெறும் போது ஆயுதங்கள் தாமாகவே கீழே விழுவது நிச்சயம்.

ஆயுதந் தாங்கும் துன்பகரமான ஒரு நாடு இனியும் நமக்கு வேண்டாம். அமைதி சுபிட்சம் சமத்துவத்துடன் அச்சம், சந்தேகமின்றி ஒருதாய் மக்களாக சகல இன, மத மக்களும் வாழும் நாட்டை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்.

கிழக்கு மாகாணம் தூரமாக இருந்த போதும் அப்பிரதேச மக்கள் மனதால் எம்முடன் நெருக்கமாகவே உள்ளனர். அதை நான் அறிவேன். வட பகுதி மக்களும் அவ்வாறே உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதியதல்ல. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ பெருமளவு வாக்குகளைப் பெற்ற தொகுதி யாழ்ப்பாணமே.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களுடன் நெருக்கமான கட்சி. கிழக்கு மக்களின் சிறந்த தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இரண்டாயிரம் பேர் இன்று இக்கட்சியில் இணைந்துள்ளனர். இம் மக்களை நாம் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம். விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முக்கிய பொறுப்பொன்றையும் வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாணம் எவ்வாறிருந்தது என்பது சகலருக்கும் தெரியும். அம் மக்கள் எதிர்காலமற்றவர்களாகவே வாழ்ந்தனர். அந்நிலை மாற்றமடைந்து இன்று கிழக்கு மாகாணம் மேல் மாகாணத்தைப் போன்று முன்னேற்றமடைந்து வருகிறது.

‘கிழக்கின் உதயம்’ கிழக்கை விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றது என்பதை இம்மக்களின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் புரிந்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கிழக்கின் உதயம் போன்றே வடக்கின் உதயமும் விரைவில் நடைமுறைக்கு வரும்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து வடக்கு மக்களும் விடுவிக்கப்படும் காலம் வெகு தூரத்திலில்லை. இன்று நாளையே அது இடம்பெறலாம்.

கிழக்கில் சிறந்த நிர்வாகம் இன்றுள்ளது. கடந்த மூன்று வருட காலத்தில் 300 பேர் பொலிஸ் துறையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் மேலும் பொலிஸில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கு வசதியாக மட்டக்களப்பு, கல்லடி தமிழ் பொலிஸ் பயிற்சி நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் அபிவிருத்தியை நோக்குகையில் கிழக்கிலேயே அதிகளவு அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது.

தற்போது நாட்டின் முற்போக்கு கட்சிகள், அமைப்புகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே இணைந்து கொண்டுள்ளன. தமிழர், முஸ்லிம்கள், சிங்கள வரென நம் அனைவரினதும் தாய்நாடு இலங்கை. இது எமது நாடு இந்நாட்டில் பயமின்றி, சந்தேகமின்றி வாழ சூழல் ஏற்படுத்தப்படும். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும். உங்கள் எதிர்காலம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சுபிட்சமானதாக நாம் இணைந்து உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்:

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply