அனுமதி அளித்தால் ஜெயலலிதாவை சந்திக்க தயார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நாள்தோறும் பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மதுரையில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில், மதுரை மாவட்டத்தில் 14 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருந்தவரும், 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவரும், ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளருமான ஏ.தெய்வநாயகம் சத்தியமூர்த்தி பவன் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அவருடன், மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.தம்பிதுரை, துணை தலைவர் எல்.முருகேசன், மத்திய கயிறுவாரிய உறுப்பினர் என்.பி.ஜெயகுமார் ஆகியோர் உள்பட ஏராளமான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர்.இதே போன்று, ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களான, காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் சக்கரபாணி செட்டியார், தனது ஆதரவாளர்களுடன் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசு உடன் இருந்தார்.
பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- திருச்சியில் ஜி.கே.வாசன் நடத்தும் கூட்டத்திற்கு எதிர்ப்பாகத்தான் நீங்கள் மதுரையில் போட்டி கூட்டம் நடத்த உள்ளதாக கூறுகிறார்களே?
பதில்:- முதலில் திருச்சியில் அந்த கூட்டம் நடைபெறுமா? என்பதே சந்தேகம். சந்தேகமாக இருக்கும் போது போட்டி கூட்டம் போடுவதற்கான அவசியம் இல்லை. திருச்சி கூட்டத்தை நல்லபடியாக அவர்கள் நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
கேள்வி:- 5 மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- பாதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பங்களை பார்த்து சமாதானம் சொல்வதிலோ பொருள் உதவி செய்வதிலோ எந்த விதமான பயனும் வந்து விடாது. மாறாக, அந்த தூக்கு கயிறு அந்த ஐவரின் கழுத்தில் விழாமல் தடுக்கப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினை என்றாலும் சரி, அல்லது இந்திய மீனவர்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதனை உருவாக்கிய ராஜபக்சேவை தூக்கி எறிந்து, இலங்கை தமிழருக்கு ஆதரவான ஒருவரை, தலை பீடத்தில் உட்காரவைப்பதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி:- நீங்கள் எல்லா தலைவர்களையும் சந்திக்கிறீர்கள். முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?
பதில்:- நான் என்னைவிட வயது முதிர்ந்த தலைவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்றேன். என்னை விட ஜெயலலிதா ஒரு வருடம் மூத்தவர் தான். அவரை சந்திப்பதில் எனக்கு எந்த விதமான சங்கடமும் கிடையாது. ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரை சந்திக்க நான் தயார். அவர் அனுமதிப்பாரா? என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
காமராஜர் அரங்கத்தில் அசைவ உணவு பரிமாறுவதற்கு சோனியாகாந்தி அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேலை நாசர், தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, மத்திய சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் என்.ஷாஜகான் உள்பட ஏராளமான நிர்வாகிகள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பிற்பகலில் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.விஜயன், துறைமுக கழக முன்னாள் உறுப்பினர் ஜெகநாதன் ஆகியோரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளின் போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராணி வெங்கடேசன், அருள் அன்பரசு, மாவட்ட தலைவர் ரங்கபாஷியம் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply