புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மஹிந்த ராஜபக்ஷவே : ரணில்

ஐரோப்பிய ஒன்றிய சாதாரண நீதிமன்றம் மூலம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதால் நெதர்லாந்தும் பிரித்தானியாவும் அவ்வாறே செய்ய எண்ணியிருந்ததாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலிகள் மீதான தடையை நீக்குமாறு டயஸ்போரா குழு வழக்கு தாக்கல் செய்தபோது அதற்கு எதிராக செயற்பட இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பு இருந்ததாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் அண்மையில் தடை நீக்கப்பட்டபோதும் இலங்கை அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பதிலளிக்க இலங்கைக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அதனை அரசாங்கம் கணக்கிலெடுக்காது இருந்தமையால் புலம்பெயர் தமிழர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டு செயற்படுவோர் யார் என்பது தெளிவாவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தனக்கு எதிராக சேறு பூசப்படுகின்ற போதும் உண்மையில் யார் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான தடை நீக்கத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்காத நிலையில் எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் புலிகள் மீதான தடையை இரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகார பாதுகாப்பு கொள்கை தொடர்பான சங்கத்தின் பிரதான பிரதிநிதி பெட்ரிகா மொக்கேரினியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழர்கள் வாக்களிக்காது தன்னை தோல்வியடையச் செய்ய புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வாங்கியது மஹிந்த ராஜபக்ஷவே என கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மக்களுக்கு இரண்டு லட்சம் தொலைபேசி அழைப்புகளை எடுத்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply