புலிகளின் புலனாய்வுத்துறை முக்கிய உறுப்பினர் துரோணர் பலி.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த புலிகளின் புலனாய்வுத்துறையின் உறுப்பினரான துரோணர் என்பவர் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல், தலதா மாளிகை, கலதாரி விடுதி, உள்ளிட்ட கொழும்பில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர் என பாதுகாப்பு தரப்பின் புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.
10 வருடங்களுக்கு மேலாக கொழும்பில் நடத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு பொறுப்பாக துரோணர் செயற்பட்டு வந்துள்ளதாகவும் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். நாராஹென்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் உள்ள சிங்கள பெண்ணொருவருடன் தொடர்பை கொண்டிருந்த இவர் கொழும்பில் பல இடங்களில் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட புலிகளின் குழுவொன்றுக்கும் துரோணரே தலைமையேற்றிருந்ததாகவும் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
இந்த குழுவினை சேர்ந்த பெண்கள் உட்பட 30 பேர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கொழும்பில் பாரிய தாக்குதல்களை நடத்தும் நோக்கில் சென்றிருந்ததாகவும் இவர்களுக்கான கட்டளைகளை வழங்கும் பொறுப்பு துரோணருக்கே வழங்கப்பட்டிருந்தது எனவும் தெரியவந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வுத்துறையினரால் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வைத்து இவரை கைதுசெய்யும் முயற்சி தோல்வியடைந்தது.
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி துவான் முத்தலிப் உள்ளிட்ட குழுவினரால், மருதானையில் உள்ள தற்காலிக தங்குமிடம் ஒன்றில் வைத்து துரோணரை கைதுசெய்ய முயற்சிக்கப்பட்டது. எனினும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply