எதிரணியின் பொதுவேட்பாளராக ரணில் விக்ரமசிங்க?
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படலாமென தெரிய வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாக ஐவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, அர்ஜுன ரணதுங்க, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோர் இதிலடங்குவர்.இதில் மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா பண்டாரநாயக ஆகிய இருவரும் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் அங்கீகாரம் தேவை. ஏற்கனவே ஐ.தே.கட்சியின் செயற்குழு ஐ.தே. கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளதால் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படும் சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க தேசிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான அர்ஜுன ரணதுங்க விருப்பம் தெரிவித்துள்ள போதும் தமிழ் முஸ்லிம் வாக்குகள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க பொதுவேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார். ஏனென்றால் தெற்கில் சிங்கள மக்களின் ஆதரவு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக் கூடிய ஒரே வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை நியாயமான சமூகத்துக்கான அமைப்பின் ஸ்தாபகர் மாதுளுவாவே சோபித தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply