ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் புதன்கிழமை வெளியீடு
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் 19 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான நான்கு வருடங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை யினால் அன்றைய தினமே வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என நம்புவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிடுகையில்,
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராகிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாடளாவிய ரீதியில் தயார் படுத்துவதற்கான அனைத்து விதமான முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
குறிப்பாக இன்றைய தினம்(நேற்று) கொழும்புக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2912 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வரவழைத்துள்ளோம். அதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறவைப்பதற்காக நாங்கள் பாடுபட்டுவருகின்றோம்.
அந்தவகையில் இன்னும் 72 மணித்தியாலயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகலாம். வெளியாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆனால் எதிர்க்கட்சியினர் இன்னும் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையிலும் அவர்களினால் இன்னும் பொது வேட்பாளரை தெரிவு செய்ய முடியவில்லை. பொது வேட்பாளர் இன்னும் வராமலேயே உள்ளார்.
ஆனால் எந்த பொதுவேட்பாளர் வந்தாலும் எமது ஜனாதிபதிக்கு அது சவாலாக அமையாது. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். குறிப்பாக கடந்த 202102 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெற்ற மேலதிக வாக்குகளை விட அதிக மேலதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீ்ட்டுவார்.
அதாவது இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவில் இரண்டாம் முறை வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறவேண்டிய அவசியமில்லை. முதல் தடவையிலேயே ஜனாதிபதி தேவையான சதவீதத்தை பெற்று வெற்றிபெறுவார்.
விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாராகிவிடும். அதாவது நாட்டுக்கு எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதனைக்கொண்டு இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply