தாயகத்தில் கழிப்பறைகள் கட்ட உதவுவீர் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களுக்கு மோடி அழைப்பு

தாயகத்தில் ஏழை மக்களுக்காக கழிப்பறைகள் கட்டித்தர உதவ வேண்டும் என்று ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், “இந்தியா எதற்காக பின்தங்கி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. எளிமையான மக்களுடன் இணைந்து பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்” என்று அவர் பேசினார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஜி-20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, இன்று (திங்கள்கிழமை) காலை சிட்னி நகருக்கு வந்தடைந்தார்.

சிட்னியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டல் புல்மனுக்கு செல்லும்போது, ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளாக அங்கு வந்த 4 நடன கலைஞர்கள் அவர்களது பாரம்பரிய நடனமாடி மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு பாரம்பரிய பழங்குடியின வேட்டைக் கருவியாக உபயோகப்படுத்தப்படும் ‘பூமராங்’ எனப்படும் கருவியை அவர்கள் பரிசாக அளித்தனர்.

அங்கிருந்து சிட்னி நகரில் உள்ள அல்போன்ஸ் ஒலிம்பிக் பூங்காவில் உரை நிகழ்த்துவதற்காக புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பாரம்பரிய முறையிலான வரவேற்புடன் ஒலிம்பிக் பூங்கா மேடை ஏறிய பிரதமர் மோடியை 16,000-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் கைதட்டலுடன் வரவேற்றனர்.

பின்னர் இந்திய நேரப்படி 1.23-க்கு தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:

“நீங்கள் அளித்திருக்கும் சிறப்பான வரவேற்பும் மரியாதையும் எனக்கானது அல்ல. இவை அனைத்தும் எனக்கு வாக்களித்து மக்களைச் சேர வேண்டியது. சிட்னி நகரின் தோற்றம் உலகின் அனைத்து மக்களையும் கவர்ந்திழுக்க கூடியதாக உள்ளது.

சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே, சுவாமி விவேகானந்தர் கூறினார்… ’50 ஆண்டுகளுக்கு உங்களது கடவுளை மறந்து பாரதத்தை மட்டுமே வணங்குங்கள்’ என்று. நாம் இந்தியாவுக்காக உயிரை விட வேண்டாம், இந்தியாவுக்காக வாழ்ந்தாலே போதும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் பிறந்தவர்களில் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். நண்பர்களே, இனி ஓர் இந்திய பிரதமர், ஆஸ்திரேலியா வரவதற்காக நீங்கள் இனி 28 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டாம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பெயர் கொண்டு திகழ்கிறது. அதேபோல ஜனநாயகத்திலும் சிறப்புடன் விளங்குகிறது. பல விஷயங்களில் இரு நாடுகள் ஒற்றுமை கொண்டுள்ளது.

இந்தியாவுக்காக உழைக்க 250 கோடி மக்களின் கரங்கள் இருக்கின்றன. இதில் சுமார் 200 கோடி மக்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். நாம் நாட்டுக்காக உழைக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். இரவு புறப்பட்டால் மறுநாள் இங்கு வந்து சேர முடியும். ஆனால் நான் உங்களை வந்து பார்ப்பதற்கு 28 ஆண்டுகள் ஆகியுள்ளது.

எந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதோ, அங்கு வருவதற்கு எனக்கு தயக்கம் இல்லை. இந்தியா எதற்காக பின்தங்கி இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எளிய மக்களுக்காக உழைத்து, பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.

‘ஜன் தன் யோஜ்னா’ குறித்து நான் ரிசர்வ் வங்கியிடம் கூறினேன். அவர்கள் அதனை நிறைவேற்ற 3 வருடங்கள் ஆகும் என்றனர். ஆனால், அதனை 150 நாட்களில் முடிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்படி, கடந்த 10 வாரங்களில் 71 லட்ச வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. நிறைவேற்ற முடியாது என்று கூறிய நபர்கள் தான் இதனை தற்போது முடித்துக் காட்டி உள்ளனர். இது எப்படி முடிந்தது?

இந்தியாவில் ஏழை மக்களுக்கு கழிவறைகள் கட்டுவதற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும். இந்தச் சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்தியாவின் மீதான தவறான பார்வை சுத்தப்படுத்தப்படும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ஆரம்பமாகி உள்ளது. இந்த உலகுக்காக உருவாக்க முடிந்த இந்தியருக்கு இதன்மூலம் தக்க வாய்ப்பு வழங்கப்படும். முதலீட்டாளார்களுக்கு உரிய தரமான மரியாதை வழங்கப்பட வேண்டும்.

குஜராத்தில் கொல்ஃப் விளையாட்டு பயிற்சி மையத்தை ஜப்பானிய சுற்றுலா பயணிகளுக்காக ஏற்படுத்தி உள்ளோம். அதேபோல ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.

இந்திய இளைஞர்களுக்கு இப்போது தேவையானது திறன் மேம்பாடு. நீங்கள் கனவு காணும் இந்தியாவை உருவாக்க நாம் தயாராக வேண்டும். சட்டங்கள் மக்களை நிம்மதியாக வாழ் வழி செய்ய வேண்டும். இதற்காக நான் சில சட்டங்களை நீக்க தயாராக உள்ளேன். திறந்த கதவுகள் தான் புதிய காற்றை உள்ளே கொண்டு வரும்.

இந்தியா வாழ் வெளிநாட்டவர்கள் பழைய அனுபவங்களை கண்டுத் தயங்க வேண்டாம். புதிய அரசு வெளிநாட்டவர்களுக்காக சிறப்பான வழிகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கான விசா பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்” என்றார் மோடி.

இதைத் தொடர்ந்து, மாலை நடைபெற இருக்கும் மோடி உரை நிகழ்ச்சியை 5,000-க்கும் மேலான திறந்தவெளித் திரைகளில் காண ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்

பிரதமர் மோடியின் உரையை நேரில் பார்க்க வாரத்தின் முதல் நாள் என்றுகூட பாராமல் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் திரண்டு வந்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply