புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டுமென அமெரிக்கா ஒருபோதும் இலங்கைக்கு ஆலோசனை வழங்காது

இலங்கை அரசாங்கத்தை, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் மீண்டுமொருதடவை தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன்தான் பேச்சு நடத்த வேண்டுமென அமெரிக்கா ஒருபோதும் இலங்கைக்கு ஆலோசனை வழங்காது என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் மைக் ஹமர் கூறியிருந்தார். இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதை ரெபேர்ட் ஓ பிளேக்கும் கொழும்பு ஊடகமொன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இலங்கையின் இனப்பிரச்சினை சமாதானப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என ஹமர் கூறியிருப்பது மிகவும் சரியானது” என்றார் பிளேக்.

வடபகுதியில் தொடர்ந்தும் நிலவிவரும் மனிதநேயப் பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா கவலையடைவதுடன், இவை தொடராது தடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் அந்த ஊடகத்திடம் கூறினார். குறிப்பாக தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்களை வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

“நாமும் ஏனைய இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஆயுதங்களைக் கைவிடுமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். மோதல்கள் அற்ற பகுதியை உருவாக்குமாறு இரண்டு தரப்பினரிடமும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என ரொபேர்ட் ஓ பிளேக் கூறினார்.

அத்துடன், சர்வதேச அமைப்புக்கள், தூதரகக் குழுக்கள் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று மக்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஒருபோதும் ஆலோசனை வழங்காது என அமெரிக்கத் தூதுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply