சகல மலையக கட்சிகளும் ஜனாதிபதிக்கே ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பிரதான மலையகக் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளன. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியைச் சந்தித்து இக்கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. மலையகத்தின் பிரதான கட்சியான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், திருமதி. சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் பிரதியமைச்சர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் ஐக்கிய முன்னணி உட்பட பல தொழிற் சங்கங்களும் ஜனாதிபதிக்குத் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை அதிக தமிழ் வாக்குகளைப் பெறுவார் என பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை அதிகளவான தமிழ் வாக்குகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற முடியாது போனாலும், இம்முறை தமிழ் வாக்குகளை அதிகம் பெறுவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மலையகத்தைப் பொறுத்தவரை அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் கொழும்பிலுள்ள தமிழர்களும் ஜனாதிபதிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.

மேலும் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று வந்த கொழும்பின் ஐந்து தொகுதிகளையும் இம்முறை வென்று காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் அரசியல் விவகார தலைவர் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில் சிறுபான்மையின மக்களது பாதுகாப்பிற்கு நிறைவேற்று அதிகார முறைமை கொண்ட ஜனாதிபதி முறை அவசியம் என்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதே அதிகாரத்துடன் மீண்டும் தெரிவு செய்யப்படுவார். அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. நாம் அதற்கான முழுமையான ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply