27-ந் தேதி நடக்கும் ம.தி.மு.க. கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 27-ந் தேதி அன்று, சென்னையில் தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில், ம.தி.மு.க. சார்பில், என்னுடைய தலைமையில் ‘தியாகத்திருநாள்-பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்’ என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல்துறையினரிடம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம். கடந்த மூன்று நாட்களாக அனுமதி தருகிறோம், தருகிறோம் என்று சொல்லிக்கொண்டே வந்து, இப்போது கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது; பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் வாய்மொழியாக தென்சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் இன்று தெரிவித்து உள்ளனர்.

அனுமதி மறுப்பை எழுத்து மூலமாக தாருங்கள் என்று கேட்டதற்கு, அதுவும் தர முடியாது என்று காவல்துறையினர் கூறி உள்ளனர். அனுமதி அளிப்பதாக தொடக்கத்தில் காவல்துறையினர் கூறியதால், பெரும் பொருட்செலவில் தேதி குறிப்பிட்டு சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டி இருக்கின்றோம். எனவே, நவம்பர் 27-ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு, காவல்துறை அனுமதி வழங்குமாறு தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறேன்.

அனுமதி மறுக்கப்பட்டால், சட்டப்படியும், அறப்போர் வழியிலும் ம.தி.மு.க. நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply