மஹிந்த அரசாங்கத்தை இன்று கவிழ்க்க முடியுமா?

2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று பகல் கூடவுள்ள நிலையில் விவாதங்களின் பின்னர் மாலை 5 மணிக்குப் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 24ம் திகதி பாராளுமன்றில் சமர்பித்தார்.அதன்பின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஒக்டோபர் 25ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு குழுநிலை விவாதம் நவம்பர் 3ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை இடம்பெற்றது. அதன்படி இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறும் வாக்கெடுப்பு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. அரசாங்கத்தில் இருந்து முக்கியமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளதால் வாக்கெடுப்பு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியில் இருந்து மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் விலகக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

இன்றைய வாக்கெடுப்பின் போது பங்கேற்காதிருக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அதேவேளை, வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பகல் கூடி ஆராயும் என அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ராஜாப்தீன் தெரிவித்தார்.

எனினும் வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் வெற்றிகொள்ளும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நடைபெறும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply