பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்
பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக மக்கள் மிகவும் விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் யாப்பா கேட்டுக்கொண்டார். ஐ.ம.சு. முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று ஸ்ரீல.சு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஐ.தே.க.வினரை ஓரங்கட்டி ஐ.தே.க. முழுமையாக பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேசத்துக்குச் செய்யும் பாரிய சூழ்ச்சியாகும். இதன் பின்னணியில் சர்வதேச சூழ்ச்சிகள் செயற்படுகின்றன.
இப்போது நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமான பொருளாதாரம் உள்ளது. ஸ்திரமான தலைமை இருக்கிறது. இந்த ஸ்திரத்தன்மையை குழப்ப வேண்டாம். ஜோன் அமரதுங்க 24 மணி நேரத்துள் நிறைவேற்று அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்கிறார். மைத்திரியோ 100 நாட்கள் என்கிறார். மற்றவரோ மாற்றவே கூடாது என்கிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்கள். சோபித்த தேரரின் கூற்று அப்படியே மெளனமாகிப் போனது.
100 நாட்களில் ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றிவிட முடியாது. அழுக்கான உடையை மாற்றுவது போன்று அரசியலமைப்பையோ, நிறைவேற்று அதிகாரத்தையோ மாற்றிவிட முடியாது. ஒருபோதும் ஸ்திரமான அரசொன்றை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்துடனேயே சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஸ்திரத்தன்மை குலைக்கப்படும் போது மக்கள் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனையே இன்று சர்வதேசம் எதிர்பார்க்கிறது.
முதற்கட்டமாக ஐ.தே.க.வை பலமிழக்கச் செய்வதுதான் பிரதான நோக்கமாகும். இந்த சிறிகொத்தா மாளிகை கூட ஒருநாள் ஏலத்தில் விற்கப்பட்டு விடும். ஐ.தே.க.வினர் இதனை நன்றாக சிந்திக்க வேண்டும்.ரணில் விக்கிரமசிங்க இப்போது பாரிய அளவில் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவருடன் அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்படியானால் பிரதான கட்சியான ஐ.ம.சு. முன்னணியும் பலமிழந்துவிட்டதா என கேட்டபோது, ஐ.ம.சு.மு.வில் பல கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகூட இந்த சூழ்ச்சிக்குள் சிக்கி பலமிழந்து நிற்கிறது என்றும் பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply