ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியில் வட பகுதி மக்களும் பங்காளராகுவோம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றி யிலே வட பகுதி மக்களும் பங்காளராக வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலே தீர்வு காண முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலையொட்டி முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
13ஆவது திருத்தத்தை துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த முன்வந்தது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே. எமது அரசியல் உரிமை கோரிக்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையில் வடமாகாண சபை சென்று குரங்கின் கையில் பூமாலையாகியுள்ளது. அதற்காக எமது அரசியல் அபிலாஷைகளை முடக்கி விடமுடியாது. அரசியல் தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜ பக்ஷவே. அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதே எமது முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் பிரதான இலக்காகும்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதில் நாம் பங்காளராக வேண்டும். எமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற அவருக்கு வாக்களிப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply