இன்னும் 3 மாதங்களில் சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறது
சிவாஜிகணேசனுக்கு சொந்தமான ‘சாந்தி’ தியேட்டர் இன்னும் 3 மாதங்களில் இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில், 4 நவீன தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. திருட்டு வி.சி.டி. மற்றும் பல பிரச்சினைகளால் சினிமா தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. சில தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன.
சென்னை நகரை அலங்கரித்த வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சபையர், புளூடைமண்ட், எமரால்டு, கெயிட்டி, பாரகன், சன், ராஜகுமாரி உள்பட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.
அதேபோல் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றான ‘சாந்தி’ தியேட்டரும் இடிக்கப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் அந்த தியேட்டர் இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில், 4 நவீன தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது.
சாந்தி தியேட்டர் 53 வருடங்களுக்கு முன்பு ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர், சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்தவர். இவருக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில், ‘ஆனந்த்’ என்ற தியேட்டரும் இருந்தது.
1962-ம் வருடம் சாந்தி தியேட்டரை ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி தியேட்டரிலேயே திரையிடப்பட்டன.
2005-ம் ஆண்டு சாந்தி தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது. சாந்தி, சாய்சாந்தி என 2 தியேட்டர்களாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் திரையிடப்பட்டது. அந்த படம், 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தது.
இப்போது, சாந்தி தியேட்டரை இடித்து விட்டு, அந்த இடத்தில் 4 நவீன தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான வேலை இன்னும் 3 மாதங்களில் தொடங்க இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply