மைத்திரியுடன் விவாதத்திற்கு ஜனாதிபதியை அனுமதியோம் : வேறு ஒருவரை அனுப்பலாம் என்கிறது ஆளும் கட்சி
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பகிரங்க விவாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள அரசாங்கம் தேவைப்படின் மைத்திரிபால சிறிசேனவுடன் விவாதிக்க வேறு ஒருவரை அனுப்புவதாகவும் குறிப்பிட்டது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் டலஸ் அலகபெரும அங்கு கருத்துத் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நேரடி விவாத்தில் கலந்து கொள்ள பொது எதிரணி வேட்பாளருக்கு அழைப்பு விடுக்க முடியாது. ஏனெனில் மைத்திரிபால சிறிசேன தற்போது அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்றே பதிவு செய்துள்ளார். கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவோடு கட்சியின் பொதுச் செயலாளர் நேரடி விவாத்தில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட முடியாதது.
அவ்வாறு விவாதமொன்றினை மேற்கொள்ள வேண்டுமாயின் எமது புதிய செயலாளரை நியமிக்க முடியும். ஆனால் அவரையும் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டால் மட்டுமே முடியும்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு கருப்புப் புள்ளியினை மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். கட்சியின் மிக முக்கிய பொறுப்புகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மைத்திரிபால சிறிசேனவிடம் கொடுத்திருந்த போதிலும் அவர் போலி ஆசைகளுக்கு விலைபோய் கட்சியினை அசிங்கப்படுத்தி விட்டார்.
எனவே அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதியினை விவாதிக்க அனுமதிக்கவே முடியாது. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் விவாதத்திற்கு செல்வாராயின் அதை அரசாங்கம் ஒரு போதும் விரும்பாது. நாமே அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய தோல்வியுடன் மைத்திரிபால சிறிசேன தான் செய்த தவறினை உணர்வார். 9 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் வாருங்கள். ஜனாதிபதியுடன் அப்பம் சாப்பிடாது பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply