முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார் ரிஷாத் : பசில்

எதிரணிக்குத் தாவியதன் மூலம்  வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார் ரிஷாத் பதியுதீன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நீண்டகாலமாக அரசுடன் இணைந்து செயற்பட்டு வந்தது. எனினும், அக்கட்சியின் ரிஷாத் தலைமையிலான ஒரு பகுதியினர், அரசிலிருந்து வெளியேறினர். இது குறித்து எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.அந்த கட்சியின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா எம்முடன் இருக்கின்றார். அத்துடன், அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மேற்படி முடிவை தாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்றும், அரசுடனேயே தொடர்ந்தும் செயற்படப் போவதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.

எனவே, பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்குவார்கள் என நம்புகின்றேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையும் ரிஷாத்துடன் நான் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தேன். நிகழ்வு முடிவடைந்த பின்னர் அவருடன் நான் நீண்ட நேரம் பேச்சு நடத்தினேன். அதில் அரசியல் பிரச்சினைகள் குறித்து  கலந்துரையாடலில் ஈடுபடவில்லை. தனிப்பட்ட பிரச்சினை குறித்தே, அதாவது, எமது கட்சி அல்லாத, அரசியலுடன் தொடர்புடைய ஊடகவியலாளர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்தே அடிக்கடி பேசினார்.

ரிஷாத்துக்கும் எமக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் வழங்கினேன். வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் என்ற அடிப்படையிலேயே உதவிகளை வழங்கினேன். அவருடன் எவ்வித முரண்பாடும் இல்லை.

அரசிலிருந்து வெளியேறியமை அரசுக்கு பாதிப்பு இல்லை எனினும், இதனால், வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கே கூடுதல் பாதிப்பு ஏற்படும். அவர்களை ரிஷாத் பதியுதீன் காட்டிக்கொடுத்துள்ளார்.

அக்கட்சியினரின் மேற்படி முடிவால், அரசுக்கு சாதகமான சூழல் ஏற்படவும் இடமுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply