நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்ததும் அவசரம் அவசரமாக இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியது மத்திய அரசு : ஜெயலலிதா
நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்ததும் அவசரம் அவசரமாக இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியது மகிழ்ச்சி தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கருணாநிதி மீது தான் கோபம் என்றும், சிங்கள அரசின் மீதோ, மத்திய அரசின் மீதோ அவர்களுக்கு கோபம் இல்லை என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார். தன்னுடைய பதிலின் மூலம், மத்திய அரசு தவறு செய்து இருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது தெளிவாகிறது.
இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை, கருணாநிதி தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதை கருணாநிதி செய்யவில்லை. இதன் விளைவாக இலங்கை தமிழர்கள் ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அடுத்ததாக, இலங்கை தமிழர்களுக்காக உண்டியல் வைத்து அ.தி.மு.க. சார்பில் நிதி திரட்டுவது குறித்து சுட்டிக்காட்டிய கருணாநிதி, அரசு சார்பில் காசோலையாக மட்டுமே நிதி பெறப்பட்டதாக கூறியிருக்கிறார்.
பாட்டாளி மக்கள் …
9-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது இலங்கை தமிழர்களின் நிவாரணத்திற்காகவே தவிர, சுயநலத்திற்காக அல்ல என்பதை முதலில் கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனது வேண்டுகோளினை ஏற்று அந்த உண்டியலில் பணம் போட்டவர்கள் எல்லாம் எனதருமை கழக உடன்பிறப்புகளாகிய செயல் வீரர்கள், வீராங்கனைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள், சாதாரண ஏழை, எளிய, பாட்டாளி மக்கள் தான்.
இது மட்டும் அல்லாமல், பெற்றோர்கள் அவ்வப்போது கொடுக்கும் கைச்செலவு பணத்தை சேமித்து வைத்திருந்த சிறிய குழந்தைகளும் இலங்கை தமிழர்களுக்காக அந்த உண்டியலில் பணம் செலுத்தினார்கள். அவர்களால் முடிந்த அளவு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என போட்டிருக்கிறார்கள்.
கருணாநிதி நினைப்பது போல் அவர்கள் எல்லாம் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்ல. அவர்களிடம் காசோலை எல்லாம் கிடையாது.
இது தவிர, நான் எனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாயும் வழங்கி இருக்கிறேன். கூட்டணி கட்சி தலைவர்களும் நிதி வழங்கியுள்ளார்கள். உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்தப் பணத்திற்கும் வரைவோலை எடுக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதியால் திரட்டப்பட்ட நிதி, கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமாகிவிட்டதாக நான் அறிக்கை விடுத்ததாகவும், அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலம் கருணாநிதி எனக்கு நோட்டீஸ் அனுப்பியதும், நான் அவ்வாறு சொல்லவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று எனது வழக்கறிஞர் மூலமாக நான் ஜகா வாங்கியதாகவும் கருணாநிதி தனது கேள்வி-பதில் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நான் எனது அறிக்கையில் இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக்கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.
கடந்த ஐந்து வருட காலமாக இலங்கை தமிழர்கள் நலன் குறித்து வாய் திறக்காத காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வந்த மத்திய அரசு, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கைப் பார்த்த மத்திய அரசு, நான் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது.
எது எப்படியோ, நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக, நான் இந்த பிரச்சினையில் தலையிட்டதன் காரணமாக, மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு நன்மை ஏற்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply