சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது
சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவமாடி 9 வருடங்கள் ஆனாலும் சுனாமி நினைவலைகளின் சோகம் இன்னும் குறையவில்லை.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ம் தேதி காலை யாரும் எதிர்பாராத இதுவரை கண்டிராத வகையில் சுனாமி தாக்கியது.கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த கடலோர மீனவ மக்களை துயரத்தின் எல்லைக்கு எடுத்து சென்றது சுனாமி ஆழிப்பேரலை. அந்த பேரழிவின் தாண்டவம் உலகையே புரட்டிப் போட்டது.
இந்தோனேசியா நாட்டின் கடலுக்கடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பாதிப்பால் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் கடற்கரை கிராமங்களையும், கடலோர கிராமங்களையும் விழுங்கி சென்றது. அந்த ஆழிப்பேரலையின் தாக்குதலுக்கு தமிழக கடலோர கிராமங்களும் தப்பவில்லை.
தமிழக கடற்கரையில் நாகப்பட்டினம், குமரி மாவட்டம், மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான மனித உயிர்களை சுனாமி பேரலை காவு வாங்கியது. உயிர்சேதம் மட்டும் அல்லாமல் உடமைகளையும், சொந்த பந்தங்களையும் இழந்தவர்கள் ஏராளம். அந்தக் கோரக் காட்சிகள் இன்னும் கண் முன்னே நிற்கிறது.
குளச்சல் கொட்டில் பாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அவர்கள் நினைவாக அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அதற்காக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ஜ் அருகில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அவர்களின் நினைவாக நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சுனாமிக்கு குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் 34 பேர் பலியானார்கள். அனைத்து உடல்களையும் ரிபாய் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த கோர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் (26–ந்தேதி) 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.
குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரின் நினைவலைகளிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்போர் ஏராளமானோர். அத்தகைய சூழ்நிலையில் சுனாமி கோரத் தாண்டவத்தின் 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
மீனவ கிராமங்களில் இறந்தவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும், அஞ்சலி செலுத்துவார்கள். பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிகளிலும் மாலைகள் அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply