லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள்: போப் ஆண்டவர்

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர், அவர் உரையாற்றியபோது லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பிரார்த்தனைக்கு பின்பு முதல் முறையாக போப் ஆண்டவர் பிரான்சிஸ், முப்பரிமாண முறையிலான டி.வி. ஒளிபரப்பில் தோன்றி போதனை நிகழ்த்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

கிறிஸ்துமஸ் நமக்கு கடவுளின் நற்செய்தியான அமைதியை நினைவு கூரும் தினமாகும். அது இருள் சூழ்ந்த உலகையும், லஞ்சத்தையும் விட மிகவும் வலிமையானது. இவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கு கடவுளை அனுமதியுங்கள்.

நமக்கு நெருக்கமானவர்கள் கஷ்டத்துடன் போராடுகிறபோது அவர்களுக்கு கருணை மனதுடன் உதவி செய்யவேண்டும் என்கிற தைரியத்தை இன்று நாம் கொண்டிருக்கிறோமா?… நம்மில் எத்தனை பேரிடம் இரக்கமும், கருணையும் இருக்கிறது?… கருணை குணமும், மென்மையான தன்மையும் நமக்கு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் ஈராக்கில் குர்திஷ்தான் தன்னாட்சி பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக இடம் பெயர்ந்த ஒன்றரை லட்சம் கிறிஸ்தவர்களுக்காக தொலைபேசி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, சகோதரர்களே உங்களுக்கு அருகாமையில் நான் இருக்கிறேன். இதயத்தில் மிக மிக நெருக்கமாக இருக்கிறேன். குழந்தைகளும், முதியவர்களும் என்னும் இதயத்தில் இடம் பிடித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

ஏசு கிறிஸ்து பிறந்த இடமான மேற்கு கரையில் உள்ள பெத்லகேமிலும் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த கடும் சண்டையால் பெத்லகேமுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால் அண்மைக் காலமாக இப்பகுதியில் சண்டை எதுவும் நடக்காததால் பெத்லகேமில் நேற்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் திரண்டனர். பலர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பரிசுபொருட்களையும் வழங்கி மகிழ்ந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply