பதுளையில் மண்சரிவு 19 பேர் பலி

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார  கூறினார்.

இவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 8 பேரின் சடலங்களை மீட்கமுடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதுளை, லுனுகலை, பண்டாரவளை, ஊவ பரணகம, பசறை, ஹாலிஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மண்சரிவு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பதுளை மாவட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த மண்சரிவில் மீரியாபெத்தை தேயிலைத் தோட்டக் குடியிருப்பு புதையுண்டு போனது.

அங்கு புதையுண்டவர்களில் 12 பேரின் சடலங்களே மீட்கப்பட்டனர். 19 பேரின் சடலங்கள் மீட்கப்படாமல் கைவிடப்பட்டன.

அதற்கு மேலதிகமாக, அந்தப் பிரதேசத்தில் வசித்தவர்கள் என்று நம்பப்பட்ட 44 பேர் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பதுளை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலையக மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக கடந்த சில தினங்களாகவே அதிகாரிகள் மக்களை எச்சரித்துவந்திருந்தனர்.

பல இடங்களில் ரயில் பாதைகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால், கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு- பதுளை நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் 17 மாவட்டங்களில் சுமார் ஏழு லட்சம் மக்கள் இந்த மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரையோரங்களை அண்டி வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply