ஜனவரி 13 இல் பாப்பரசர் வருகை பாதுகாப்பு கடமையில் 23000 பொலிஸார்
புனித பரிசுத்த பாப்பரசரின் வருகையை முன்னிட்டு ஐந்து பிரதி பொலிஸ் மா அதிபர்களின் தலைமையில் 23,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை இலங்கை வரும் பரிசுத்த பாப்பரசர் விமான நிலையத்திலிருந்து ஜா-எல, கந்தானை, வத்தளை, பேலியாகொடை ஊடாக பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள வத்திக்கான் இல்லத்துக்குச் செல்வார்.
கட்டுநாயக்கா முதல் பெளத்தாலோக்க மாவத்தை வரையில் பாதை இருமருங்கிலும் புனித பாப்பரசரை பொதுமக்கள் தரிசிக்க முடியும்.
13 ஆம் திகதி காலை கொழும்பு காலிமுகத்திடல் உட்பட மடு தேவாலயத் தில் நடைபெறும் தேவ ஆராதனை உட்பட புனித பாப்பரசர் நாடு திரும்பும் வரையில் முழுமையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்துக்கென 23,000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப் படவுள்ளனர்.
5 பிரதி பொலிஸ் மா அதிபர்களின் தலைமையில் 17 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள். 106 பொலிஸ் அத்தியட்சகர்கள். உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 1563 பொலிஸ் பரிசோதகர்கள். உதவி பொலிஸ் பரிசோதகர்கள், 77 பெண் பொலிஸ் பரிசோதகர்கள், உதவி பொலிஸ் பரிசோதகர்கள், 6 பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 23,000 பேர் கடமையில் ஈடுபடுவர்.
13 ஆம் திகதி காலை காலிமுகத்திடலில் நடைபெறும் விசேட தேவ ஆராதனைக்கு பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காலிமுகத்திடலுக்கு இரண்டு பகுதிகளிலிருந்து மக்கள் வரக்கூடியவாறு வசதிகள் செய்யப் படவுள்ளன.
குறிப்பாக கோல்பேஸ் ஹோட்டல் சுற்றுவட்டத்துக்கு ஊடாகவும் பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு (ஜனாதிபதி செயலகம்) முன்பாகவுள்ள சுற்றுவட்டத் துக்கூடாகவும் காலிமுகத் திடலுக்குள் பிரவேசிக்கு முடியும்.
புனித பாப்பரசரை தரிசிக்கவும் தேவ ஆராதனைகளில் கலந்துகொள்ளவும் இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் வரும் மக்களை ஏற்றிவரும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு ஏ – 01, ஏ – 02, ஏ – 03, ஏ – 04, ஏ – 05 என இலக்கமிடப்பட்டுள்ளது.
கண்டி வீதியூடாக வரும் வாகனங்கள் ஏ – 01 என்ற இலக்கத்துடன் கொழும்பு யோர்க் வீதிவரை பயணிக்க முடியும். யோர்க் வீதியிலிருந்து ஜனாதிபதி செயலக சுற்றுவட்டத்தின் ஊடாக காலிமுகத் திடலுக்கு மக்களுக்கு செல்லலாம். யோர்க் வீதிவரை சென்ற வாகனங்கள் ஆட்களை இறக்கிய பின்னர் மாளிகாவத்தை பஞ்சிகாவத்தை பகுதியில் தரித்து நிறுத்த முடியும்.
காலிவீதியூடாக வரும் வாகனங்களுக்கு ஏ – 02 என இலக்கமிடப்பட்டுள்ளது இவ்வழியாக வரும் வாகனங்கள் உத்தரானந்த மாவத்தை வரை பயணிக்க முடியும். இதில் வருபவர்கள் கோல்பேஸ் சுற்றுவட்டத்துடாக காலிமுகத்திடலுக்குள் பிரவேசிக்க முடியும். வாகனங்கள் வோர்ட் பிளேஸ் பகுதியில் தரித்து வைக்க முடியும்.
அவிசாவளை, இரத்தினபுரி ஊடாக ஹைலெவல் வீதியூடாக வரும் வாகனங் களுக்கு ஏ – 03 என இலக்கமிடப் பட்டுள்ளது இவை சென்ட் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை வரை பயணிக்க முடியும். இவர்களும் கோல்பேஸ் சுற்று வட்டத்தினூடாக திடலுக்குள் பிரவேசிக்க முடியும்.
புத்தளம், சிலாபம். நீர்கொழும்பு வழியூடாக வரும் வாகனங்களுக்கு ஏ – 04 என இலக்கமிடப்பட்டுள்ளது. இவை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையில் பயணிக்க முடியும். இதில் வரும் மக்கள் ஜனாதிபதி செயலக சுற்று வட்டத்தின் ஊடாக காலிமுகத் திடலுக்குள் பிரவேசிக்கலாம். வாகனங்கள் ஆமர்வீதி பகுதியில் தரித்து வைக்கலாம்.
பியகம, கடுவெல பகுதியூடாக வரும் வாகனங்களுக்கு ஏ – 05 என இலக் கமிடப்பட்டுள்ளன. இவை சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, லேக்ஹவுஸ் வரையில் பயணிக்கலாம். இதில் வருபவர்களும் ஜனாதிபதி செயலக சுற்றுவட்டம் ஊடாக பிரவேசிக்கலாம். வாகனங்களை மெயிட்லண்ட் பிளேஸ் பகுதியில் தரித்து வைக்க முடியும்.
மோட்டார் சைக்கிள்கள் மெகலம் வீதியிலும், வேன், கார் என்பன சாமஸ் களஞ்சியசாலை பகுதி, மெயின் வீதி, மல்வத்த வீதிகளில் தரித்து வைக்க முடியும்.
தனிப்பட்ட வாகனங்களில் வருவதைவிட பொதுவாகனங்களில் வருவதே சிறந்தது. தனிப்பட்ட வாகனத்தில் வந்து வாகனத் தரிப்பிடத்துக்கு செல்லும் போது ஆராதனையில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். எனவே பொதுவாகனத்தில் வருவதே சிறந்தது. அத்துடன் பொது வாகனத்தில் வருபவர்கள் தாங்கள் வந்த வாகனத்தில் சாரதி, நடத்துனரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்வது நல்லது.
ஏனெனில் ஆராதனை முடிந்த பின்னர் தாங்கள் வந்த வாகனம் எங்கிருக்கிறது. என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவர்களுக்கு மேலதிகமாக விசேட பஸ் சேவை, ரயில் சேவை என்பனவும் நடத்தப்படவுள்ளன.
பரிசுத்த பாப்பரசரின் வருகை, காலிமுகத்திடலில் தேவ ஆராதனை, மடு தேவாலயத்தில் தேவ ஆராதனை, மற்றும் அவர் மீண்டும் நாடு திரும்பும் வரையில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பு செய்வதற்காக விசேட பொலிஸ் நடவடிக்கை பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளன.
இவ்விசேட பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் விரைவில் சகலருக்கும் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply