மெக்சிகோவில் காணாமல் போன மாணவர்கள் படுகொலை: ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

மெக்சிகோவில் 43 மாணவர்கள் காணாமல் போனதையடுத்து நேற்று 3000 பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் 26 அன்று ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் 43 மாணவர்கள் காணாமல் போயினர். அம்மாணவர்கள் காவல்துறை-ஆதரவு பெற்ற கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டது தெளிவாகத் தெரிந்ததால் அரசிற்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தெற்கு குர்ரேரோ மாநிலத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள், காணாமல் போன மாணவர்களின் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

காணாமல் போனவர்களின் பிரம்மாண்டமான புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி, “எங்களுக்கு அவர்கள் உயிரோடு வேண்டும்” என்று கோஷமிட்டும், மெக்சிகோ கொடியின் மீது கறுப்பு வண்ணததைப் பூசியும் அரசாங்கத்தின் மீதான தங்களது கோபத்தினை வெளிப்படுத்தினர்.

நீண்ட காலமாக போதை மருந்து பிரச்சனையால் மெக்சிகோவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்நாட்டு ஜனாதிபதி என்ரிக் பெனா நீடோவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் 2006-ம் ஆண்டு முதல் நடந்த போதை மருந்து கும்பல்களிடையே நடந்த மோதலில் 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 22 ஆயிரம் பேர் காணாமல் போயினர். சமீபத்தில் காணாமல் போன 43 பேரில் இதுவரை ஒருவரின் சடலம் மட்டுமே பாதி எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மீதமுள்ள 42 பேரையும் அடையாளம் காண முடியும் என்று காவல்துறைக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply