அனைத்து கைதிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வையுங்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

அனைத்து தூக்கு தண்டனை கைதிகளுக்கும் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வையுங்கள் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாகிஸ்தான் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் 134 சிறுவர்-சிறுமிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த தாக்குதலில் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மீண்டும் தூக்கு தண்டனை

சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 6 வருடத்துக்கு நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. பெஷாவர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் கொண்டிருந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் ரத்து செய்வதாக அறிவித்தது.

இதனால் கடந்த ஒரு வாரமாக, ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் தீவிரவாதிகள் அனைவருக்கும் படிப்படியாக பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி வருகிறது.

பான் கீ மூன் வேண்டுகோள்

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் அந்த தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, பான் கீ மூன் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானின் இக்கட்டான நிலைமையை ஐ.நா. பொதுச் சபையால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் முன்பு கொண்டிருந்த நிலைப்பாட்டை (தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தல்) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் வலியுறுத்தி இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதில் சட்ட ரீதியான அனைத்து விதிமுறைகளும் மதிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

சரியான முடிவு அல்ல

இந்த வார தொடக்கத்தில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையர் ஷெயத் ராத் அல் ஹூசேன், பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனை கைதிகளுக்கு மீண்டும் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அறிவித்திருந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அப்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது குறைந்து வரும் இந்த நேரத்தில் இதுபோல் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்து இருப்பது சரியான முடிவு அல்ல என்றும் அவர் கண்டித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply