யுத்தம் காரணமாக 49 ஆயிரம் பெண்கள் கிழக்கில் விதவைகள்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஒலுவில் மஹாபொல நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வெலைத்திட்டம் பற்றி அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

இந்த நாட்டிலுள்ள எந்தவொரு மாகாண சபையிலும் இல்லாத பெரும் சாதனையொன்று இம் மாகாணத்தில் நிகழ்ந்து வருகின்றது. மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களினதும் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்காக ஒரே கருத்தில் செயலாற்றி வருகின்றோம்.

கடந்த 20 வருடத்திற்கும் மேலாக யுத்த மேகம் சூழ்ந்திருந்த இந்த மாகாணத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க வாய்ப்பளித்த எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் நடந்த யுத்த சூழ்நிலைகாரணமாக 49000 விதவைகள் உள்ளனர் இதில் யுத்தம் காரணமாக 24,000 பேர் கணவனை இழந்துள்ளனர். இவற்றுள் 19,000 பேர் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள், 12,000 பேர் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதை பற்றியும் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண சபை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் அரிசி உற்பத்தியில் மிகவும் முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கு மாகாணம் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகாரணமாக அரிசி உற்பத்தியில் 12 வீதத்தையே பூர்த்தி செய்கிறது.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் பல ஆண்டு காலமாக பயிர் செய்யப்படாத நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுவதற்காக மானிய அடிப்படையில் உரம், வயலை உழுவதற்கு ஏக்கருக்கு 2000 ரூபா நன்கொடை, இலவச விதை நெல், என்பனவற்றை வழங்கியதன் மூலம் கடந்த ஆறுமாதங்களில் ஒரு இலட்சத்து முப்பத் தோராயிரம் ஏக்கர் நிலம் மேலதிகமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டதனால் 30 வீத நெல் உற்பத்தியை கண்டுள்ளது.

இது கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த வெற்றிகளுள் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply