குடும்ப ஆட்சி தலை தூக்குவதற்கு மக்கள் சந்தர்ப்பத்தை உருவாக்கக் கூடாது : அனுரகுமார திஸாநாயக்க
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வென்று விட்டால் அவர் ஒரு வாழ்நாள் ஜனாதிபதியாக இருப்பார். அதன்பின் இந்நாட்டில் குடும்ப ஆட்சி தலைதூக்கி விடும். இதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் உருவாக்கி விடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்தால் அதற்கு பிறகு ஒரு பொதுத்தேர்தல் நடைபெறவே மாட்டாது. 2018ல் வரவேண்டிய தேர்தலை ஏன் 2015ல் நடத்த வேண்டும்? யாராவது இப்பொழுது ஒரு தேர்தல் வேண்டுமென்று கோஷமெழுப்பினார்களா? இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள கோவில்களுக்கெல்லாம் சென்று நல்ல நேரம் பார்த்து நேர்த்திக்கடன் வைத்து தேர்தல் நடத்த வேண்டுமா? ராஜபக்ஷவுக்கு மக்கள் மீது மாத்திரமல்லாமல் தன் மீதே நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் இத்தனை கலக்கம். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தாலும் கூட அந்த பாராளுமன்றத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
இந்த முறையும் மஹிந்த ராஜபக்ஷ வென்றால் 2022 வரை அவர் ஒரு வாழ்நாள் ஜனாதிபதியாக இருப்பார். இன்னும் ஏழு வருடம் அவருக்கு கொடுத்தால் அதன்பிறகு அவரது தம்பிமாரும் மகன்மாரும் குடும்பத்தினருமே இந்த நாட்டை ஆள்வார்கள். இப்படி ஒரு குடும்ப ஆட்சியை இந்த நாட்டில் தலையெடுக்க விடக்கூடாது.
இந்த நாட்டில் பொருளாதாரத்தை வளர்த்ததாக தம்பட்டமடிக்கும் அவர் உண்மையிலேயே அவரது குடும்பத்தின் பொருளாதாரத்தைத்தான் வளர்த்துக்கொண்டுள்ளார். இன்று இருப்பதைப்போல இந்த நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் எந்தக்கட்டத்திலுமே வீழ்ச்சி அடைந்தது இல்லை. அரசாங்கத்தின் முழு வருமானமுமே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே போதாமலுள்ளது. 3500 கோடி செலவில் அம்பாந்தோட்டையில் கட்டப்பட்ட சர்வதேச மாநாட்டு மண்டபம் இன்று காய்ந்து கிடக்கின்றது. சூரியவெவ விளையாட்டு மண்டபத்துக்கும் அதே கதிதான். இதுதான் அபிவிருத்தியா?
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகமும் பாலியல் பலாத்கார சம்பவங்களுமே கோரத்தாண் டவமாடுகின்றன. ஒவ்வொரு தொகுதி யிலும் மிகப்பரவலாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரிகளே இத்தகைய கலாசார நாசகார செயல்களுக்கு காரணமாக இருக்கின்றார்கள். நாட்டின் பண்பாடு இன்று கேலிக்குரியதாகி விட்டது என்றார்,
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply