குளிர்காலப் பறவைகள் போன்றவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : சுசில் பிரேமஜயந்த
காலநிலைக்கேற்ப தனது இருப்பிடத்தினை மாற்றிக்கொள்ளும் குளிர்காலப் பறவைகள் போன்றவர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இவர்கள் வெளியேறியமை எமக்கு எவ்விதத்திலும் இழப்பில்லை என தெரிவிக்கும் அரசாங்கம் பிரபாகரனினால் வென்றெடுக்க முடியாத தாயகத்தினை ஹக்கீமின் மூலம் வென்றெடுக்கவே போராடுகின்றனர் எனவும் குற்றம் சுமத்தியது.அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறியமை தொடர்பில் அரசாங்கம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு பின்னர் பொதுத் தேர்தலின் போதும் அரசாங்கத்தின் வெற்றியின் பின்னர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்முடன் இணைந்து கொண்டது. முஸ்லிம் காங்கிரஸினால் அவர்களின் உதவியுடன்தான் நாம் வெற்றி பெற்றோம் என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறும் என்பது சில தினங்களுக்கு முன்னரே எமக்குத் தெரியும்.
குளிர்காலப் பறவைகள்
தேர்தல் காலங்களில் மக்களை திருப்திப்படுத்த வெளியேறி பின்னர் மீண்டும் வந்து எம்முடன் இணைந்து விடுவார்கள். குறிப்பாக சொல்வதாயின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குளிர்காலப் பறவைகள் போன்றவர்கள். அவர்களின் இயல்பு தெரிந்தே அரசின் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். தெரிவுக் குழுவில் இடம்கொடுக்காமைக்கும் இதுவே காரணம். எனவே முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றம் அரசாங்கத்திற்கு பாதிப்பும் இல்லை. இழப்பும் இல்லை.
இணங்க முடியாத கோரிக்கை
கடந்த காலங்களில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். எனினும் இவர்கள் கரையோர மாவட்டங்களை கோரும் மிகவும் பயங்கரமானதும் எம்மால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணங்க முடியாத கோரிக்கையினையே முன்வைத்தனர். அன்று விடுதலைப் புலிகளின் கோரிக்கையும் இதைப்போன்ற ஒன்றாகவே அமைந்தது. வடக்கு கிழக்கு தனி தாயகக் கோரிக்கையினை முன்வைத்தே ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். அது எம்மால் தடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சுய உரிமைக் கோரிக்கையினை முன்வைத்து எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதற்கு ஜனாதிபதி இணங்காத காரணத்தினாலேயே எம்முடன் முரண்பட்டு வெளியேறியுள்ளனர். நாங்கள் தேசிய அரசாங்கம். மூவின மக்களையும் ஒன்றிணைத்து சகல மக்களுக்குமான உரிமைகளையும் சமமாக கையாள்கின்றோம்.
இவ்வாறானதொரு நிலையில் ஒரு சிலரின் கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பது அர்த்தமற்றது.
எதிரணியுடனான இணக்கம்
எனினும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதும் பிரிவினையினை தூண்டும் விடயத்தினை நாம் நிராகரித்த போதும் பொது எதிரணி இவ் விடயத்தில் இணக்கம் தெரிவித்திருக்கின்றமையினாலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது எதிரணியுடன் இணைந்துள்ளனர். கிழக்கில் தனி ஆட்சியினை அமைத்து தனி இஸ்லாமிய தாயகம் தேவையினை பொது எதிரணியினர் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றமையும் இன்னும் ஒரு சில தினங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்து வடக்கு கிழக்கினை தனித் தாயகமாக்கும் வேலைத்திட்டத்தினையே பொது எதிரணியின் நூறு நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கின்றது.
சர்வதேச சூழ்ச்சி
இதுதான் சர்வதேசம் எதிர்பார்க்கும் பிரதான எதிர்பார்ப்பு. பொது எதிரணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் கொள்கையிலும் வேலைத்திட்டத்திலும் முற்றிலும் முரண்பட்டவர்கள். சந்திரிக்கா குமாரதுங்க, ரணில், சம்பிக்க, ஹக்கீம், சம்பந்தன் என அனைவரும் ஒன்றுடன் ஒன்று மோதும் குணம் கொண்டவர்கள்.
இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்திருப்பது தான் சர்வதேச சூழ்ச்சி. நாட்டில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னமும் நாட்டில் பிரிவினைவாதம் உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். முப்பது ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சுதந்திரத்தையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தி விட்டோம். அதை குழப்பியடித்து நாட்டில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கவே இக்கூட்டணி முயற்சிக்கின்றது.
எனவே பெரும்பான்மை மக்களும் இந்த நாட்டை ஆதரிக்கும் மூவின மக்களும் தற்போது சிந்திக்க வேண்டும். நாட்டை பாதுகாத்து தேசிய ஒற்றுமையினை நிலைநாட்டும் அரசாங்கமா அல்லது பிரிவினையினை தூண்டி நாட்டினை குழப்பும் அரசாங்கமா அமைய வேண்டும் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒன்று சேர முடியாத ஒற்றுமையில்லாத ஆட்சியினை உருவாக்க விடாது தடுத்து மீண்டும் எமது ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப வேண்டும்.
முப்பது வருட காலம் பிரபாகரன் எதிர்பார்த்தது வெறும் கனவாகவே மாறியது. ஆனால் அதை இன்று சம்பந்தன் ஹக்கீம் கூட்டணி வென்றெடுக்க முயற்சிக்கின்றது. அதற்கு சகல விதத்திலும் சர்வதேசம் உதவுகின்றது. இலங்கையின் இச் செயற்பாட்டினை பொது எதிரணி மேற்கொள்கின்றது. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை உட்பட பொது எதிரணியின் பிரிவினைவாத செயற்பாட்டினை ஒரு போதும் செயற்பட விடமாட்டோம். மக்களும் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply