பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி; மூவர் காயம்

பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதி அருகே உள்ள நடைபாதையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இரவு 8.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு வெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) பலியானார். பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக், சந்தீப், வினய் ஆகிய மூவர் காயமடைந்தனர். அவர்கள், மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் ரெட்டி கூறுகையில், “எங்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப வேண்டும் என்பதற்காக ஏதோ இரு தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

பெங்களூரில் கூடுதல் பாதுகாப்பு:

இதனிடையே, பெங்களூரு நகர் முழுவதும் கூடுதல் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

சித்தராமையா ஆலோசனை:

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக, குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், உயிரிழந்த பவானிதேவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply