வெள்ளம்: மண்சரிவு அனர்த்தம் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் சுமார் 20,000 முப்படை வீரர்கள்
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல். நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கென சுமார் 20 ஆயிரம் முப்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும், பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 22 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 409 தற்காலிக முகாம்களிலுள்ள சிவில் அதிகாரிகளுடன் இணைந்தே 20 ஆயிரம் முப்படை வீரர்களும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிவாரண மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும் மாவட்ட செயலாளர்களினதும் வேண்டுகோளுக்கு அமைய முப்படை வீரர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை அனர்த்தம், வெள்ளப் பாதிப்பு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-
வெள்ளப் பெருக்கு, மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கமான ஒன்றாகும்.
அந்த அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தமது பணிகளை முன்னெடுத்து வரும் அதேசமயம், நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி, நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், அது தொடர்பிலான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு விசேட குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.
விசேட குழு நியமனம்
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அனர்த்த முகாமைத்துவ மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தேசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்தல். நிவாரணங்களை வழங்குதல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இதற்கு தேவையான நிதியும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
முப்படை வீரர்களின் நடவடிக்கைகள்
இந்நிலையில், மாவட்ட, பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 5000 முப்படை வீரர்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 15 ஆயிரம் முப்படை வீரர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவம்
முதற்கட்டமாக அனர்த்தத்தில் சிக்கி தவிப்பவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல், பிறகு அவர்களை பாதுகாப்பான இடங்களில், முகாம்களில் தங்க வைத்தல், நிவாரண உதவிகள், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படையணிகளும் முகாம்களும்
மொத்தமாக 409 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு படையணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு படையணியில் சுமார் 500 தொடக்கம் 800 பேர் வரை அங்கம் வகிக்கின்றனர். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 147 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 7 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்னி பிரதேசத்தில் 86 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 6 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்தில் 13 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 2 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மத்திய பிரதேசத்தில் 105 தற்காலிக முகாம்களும் மேற்கு பிரதேசத்தில் 58 தற்காலிக முகாம்களும் அமைக்கப் பட்டுள்ளன.
கடற்படை
இராணுவத்தினர் தரைவழியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதேசமயம் கடற் படையினர் படகுகள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுழியோடிகள் அடங்கிய 29 மீட்புக் குழுக்களும் 67 படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படையினர் மாத்திரம் இதுவரை 314 பொதுமக்களை மீட்டெடுத்துள்ளதுடன் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
விமானப் படை
பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்பு பணிகளுக்காக செல்லும் படை வீரர்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையங்கள்
அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஏற்கனவே முன்னெடுத்துள்ள போதிலும் நல்லெண்ண அல்லது மனிதாபிமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பொதுமக்கள், பொது அமைப்புக்கள் நிவாரண பொருட்களை கொண்டுசெல்வது மிகவும் வரவேற்கத் தக்கது.
எனினும் இந்த பொருட்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட மக்களை சென்றடைவதில்லை, சில சமயம் தூர பிரதேச மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனை கருத்திற் கொண்டு இதுபோன்று கொண்டுவரப்படும் நிவாரண பொருட் களை முறையாக கொண்டு சேர்க்கும் நோக்குடன் ஐந்து பிரிவுகளில் நிவாரண பொருட்களை சேகரிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட் டுள்ளதுடன் அது தொடர்பில் நடவடிக் கைகளை மேற்கொள்ளவென இணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
அவர்களின் விபரம், தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு :-
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிழக்கு
லெப். கேர்ணல் ரவீந்திர மார்காவிட்ட (மின்னேரியா) 0765303515, மேஜர் உபுல் பண்டார (22வது படைப் பிரிவு – திருகோணமலை) 0773049878, 0263266266, லெப். கேர்ணல் ரொணி பெர்னாந்து (23வது படைப் பிரிவு – பூணானை) 0771916387, 0273278973, லெப் கேர்ணல் ஹரேண் வீரசிங்ஹ (24வது படைப் பிரிவு – அம்பாறை) 0775371151, 0113090718.
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் வன்னி
கேர்ணல் சந்திர பண்டார (21வது படைப் பிரிவு – அநுராதபுரம்) 0766907226.
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மத்தி
லெப். கேர்ணல் இளங்ககோன் (112வது படையணி – பதுளை).
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மேற்கு
மேஜர் துஷார குசும்சிறி (மாவட்ட செயலகம் – சிலாபம்) 0718470933.
மேஜர் சம்பத் நல்லப்பெரும (மாவட்ட செயலகம் – குருநாகல்) 0773487588
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிளிநொச்சி
லெப். கேர்ணல் ஷாந்த ஜயசூரிய (பாதுகாப்பு படை தலைமையகம் -இரணமடு) 0765303526.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply