மாயமான விமானம் கடலில் விழுந்தது: 3 உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றபோது 162 பேருடன் ஞாயிற்றுக்கிழமை மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மூன்று நாள்களாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களும், அதிலிருந்தவர்களின் உடல்களும் மிதந்த நிலையில் இந்தோனேசியாவையொட்டிய ஜாவா கடல் பகுதியில் கண்டறியப்பட்டன.

கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இவை கண்டறியப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்தது.

“”இதுவரை 2 பெண்களின் உடல்களையும், ஓர் ஆண் சடலத்தையும் மீட்டுள்ளோம். எஞ்சியவர்களது உடல்களையும் மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன” என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, 40 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உறவினர்கள் கண்ணீர்: விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதை சுரபாயா விமான நிலையத்தில் தொலைக்காட்சி மூலம் பார்த்த விமானப் பயணிகளின் உறவினர்கள், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கண்ணீர் மல்கினர்.

இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “”ஏர் ஏசியா க்யூ.இஸட்.8501-வின் சிதறிய பாகங்கள் மத்திய காலிமந்தனில், பங்கலான் பன் எனுமிடத்தில் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.

தேசிய தேடுதல், மீட்புத் துறையினரின் ஒத்துழைப்புடன், அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விமானத்தின் நிழல்: முன்னதாக, விபத்துக்குள்ளான விமானத்தின் உடல் பகுதியை கடலுக்கடியில் “நிழல்’ வடிவாகக் கண்டறிந்ததாக இந்தோனேசிய விமானப்படை தெரிவித்தது.

அந்தப் பகுதியை மையப்படுத்தி மீட்புப் பணிகள் நடைபெறும் என தேசிய தேடுதல், மீட்புத் துறைத் தலைவர் பம்பாங் சோயெலிஸ்ட்யோ கூறினார். மேலும் அவர் கூறுகையில், “மோசமான வானிலை, கடல் கொந்தளிப்பு ஆகியவை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாகின்றன’ என்றார்.

ஏர் ஏசியா இரங்கல்: ஏர் ஏசியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “க்யூ.எஸ்.8501 விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரத்தால் எனது நெஞ்சம் விம்முகிறது; ஏர் ஏசியா சார்பில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் ஏசியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் விமானம், இந்தோனேசியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது.

இதில் 155 பயணிகள், விமானிகள் உள்பட 7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், மோசமான வானிலை காரணமாக மாற்றுப் பாதையில் பறக்க அனுமதி கேட்டு விமானிகள், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டனர்.

இந்த நிலையில், புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து தகவல் துண்டிக்கப்பட்டு, அது மாயமானது.

அந்த விமானத்தில் பயணித்த 155 பயணிகளில் மூன்று தென் கொரியர்களும், பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் அடங்குவர். எஞ்சிய 149 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

7 விமானப் பணியாளர்களில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானியைத் தவிர ஏனைய அனைவரும் இந்தோனேசியர்கள். பயணிகளில் பதினேழு பேர் சிறுவர்கள்.

மோடி இரங்கல்

ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்ற, ஏர்ஏசியாவுக்கு சொந்தமான விமானம் நடுவானில் காணாமல் போனது. மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் கடலில் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி:

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply