முஸ்லிம்கள் வாக்களிக்கத் தவறக் கூடாது : தேசிய ஷூரா சபை
தேசிய சூரா சபை இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு அல் மஷூரா எனும் தலைப்பில் தொடர் வழிகாட்டலை வழங்க தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. இவ்வாறு அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டள்ள முதலாவது வழிகாட்டல் வறுமாறு பொதுவாக உலக அளவிலும் குறிப்பாக நமது நாட்டில் வாழ்ந்துவரும் சமூகங்களுக்கு மத்தியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு அவ்வப்போது சில விளக்கங்களை வழங்க தேசிய ஷுரா சபை தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் முதலாவது பிரசுரமாக இது வெளிவருகிறது.
முன்பெப்போதும் இல்லாத அளவில் முஸ்லிம்கள் தற்காலத்தில் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை உட்பட்ட பல்வேறுபட்ட சமூகங்களைக் கவனத்திற் கொண்டவாறு தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிப்பதே பொருத்தமானது.
எற்பட்டுள்ள மாற்றங்களில் சில இயற்கையானவை .மேலும் சில மனிதர்களின் செயல்களின் விளைவால் ஏற்பட்டவை. இந்த மாற்றங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் இயன்ற வரை கட்டுப்படுத்திக் கொள்ளவும், நிர்வகித்துக்கொள்ளவும், இப்பிரச்சினைகள் நம்முடன் தொடர்பாகும் விதத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். அது மட்டுமின்றி, நமது மத நம்பிக்கை மற்றும் அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதோடு தேசிய நவனுக்காக நம்மை சீர்படுத்திக் கொள்வதும் அவசியம்.
வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில்: “ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களுடைய நிலைகளை மாற்ற மாட்டான்”. (அர் ரஃத்- 11) எனக் கூறுகின்றான் ஆக, முதலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மனிதர்களாகிய நாம் தான். நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நமது சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாசாரம், ஒழுக்கநெறி, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் காரணமாக இதுவரை நமக்கிருந்த சுதந்திரம், உரிமைகள் போன்றவற்றிலும் பாதிப்புகள் எற்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமாயின் நமது மனச்சாட்சிக்கு மாற்றமின்றி சகலரும் ஒற்றுமையுடன் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
முஸ்லிம்கள் ஓர் இறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்பவர்களாவர். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், இவ்வுலகம் என்பது ஏக இறைவனுக்கு இபாதத் எனும் வழிபடுதல் மூலம் நமது கீழ் படிதலை காட்டுவதன் ஊடாக முடிவேஇல்லாத மறுமையின் வெற்றியை அடைய வேண்டிய சொற்ப நேர தங்குமிடமாகும். இதனையே முஸ்லிம்கள் தமது நாளாந்த தொழுகையில் ஓதும் ‘வஜ்ஜஹ்த்’இன் போது “என்னுடைய தொழுகை, அர்பணிப்பு, வாழ்வு மற்றும் மரணம் ஆகிய அனைத்தும் உலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்காகவே” (ஸூரதுல் அல்-அன்ஆம்- 176) என்று கூறுகின்றனர்.
விண்ணிலும் மண்ணிலும் நடைபெறும் சகல நிகழ்வுகளும் அல்லாஹ்வின் திட்டப்படியே, நடைபெறுகின்றன என நம்புவது முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கையாகும். நம்மை தனது கலீபாக்களாக அதாவது பிரதிநிதிகளாக உலகிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏக வல்லவனான அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையில் அல்லாஹ் நமக்கு சில பொறுப்புக்களைத் தந்துள்ளான்.
உண்மை விசுவாசிகள் என்ற வகையில் நமது வாழ்வு ஏனையோருக்கு முன்மாதிரியாக வேண்டும்.எனவே, நியாயமற்ற, தீய விடயங்கள் நடைபெறும் போது அவற்றை மௌனமாகப் பார்த்துக்கொண்டு வெறுமனே இருப்பது முஸ்லிம்களுக்குத் உகந்ததல்ல. நமது சூழலில் தீமைகள் நடைபெற்றால் அவற்றை ஒழிப்பதற்கும் நல்ல, ஒளிமையமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்ய நாம் தயங்காமல் முன்வர வேண்டும். ”எவருடைய இரு நாட்கள் ஒரே விதமாக இருக்குமோ அவர் நஷ்டமடைந்தவராவார் (அத்-தய்லமி) என்பது நபிமொழியாகும். இது பல பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளதொரு ஆழமான கூற்று, உலகில் ஏற்படும் மாற்றங்கள் விடயத்தில் எதையுமே செய்யாமல் ஒரே இடத்தில், முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி இருப்பது அறிவுடையோரின் சுபாவம் அல்ல என்பதும் இக்கூற்றில் பொதிந்துள்ள அர்த்தமாகும்.
அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நம் முன்னே இருக்கும் முக்கியமானதொரு மைல்கல்லாகும்.இந்த நாடு சென்று கொண்டிருக்கும் திசையையே இதன் முடிவு மாற்றி விடும் என்றால் அது ஒரு மிகையானதல்ல. தமது போக்கு, கொள்கைகளில் உள்ள தவறுகள் போன்றவற்றைச் சீர்தூக்கிப்பார்ப்பது தற்போதைய ஜனாதிபதியின் கடமையாகும். நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக தான் இனி என்ன செய்ய வேண்டும் என்ற விடயத்தை அவர் உளப்பூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இதே வேளை அவருக்கு எதிரணியில் இருப்பவர்களும் அவருக்கு சவால் விடுப்பவர்களும் அவரை விமர்சிப்பவர்களும் நம் நாட்டின் தற்போதைய கவலைக்கிடமான நிலையில் இருந்து அதை மீட்டுவதற்கான காத்திரமான திட்டங்களை முன் வைத்தல் வேண்டும்.
தனது சமூகத்திற்கும் முழு தேசத்திற்கும் நன்மை செய்யக் கூடிய வேட்பாளர் யார் என்பதை முஸ்லிம்கள் நன்கு சீர்தூக்கிப் பார்த்து தமது வாக்குகளைப் பயன் படுத்த வேண்டும். அதே வேளை, ஆட்சியில் ஒருவரை அமர்த்துவதும் கீழிறக்குவதும் வல்ல அல்லாஹ்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. விசுவாசிகள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ’துஆ’ எனும் பிரார்த்தனையாகும். நாட்டிற்கு நல்லது செய்யும் ஒரு தன்னலமற்ற தலைவரை நமக்கு தந்தருளுமாறும், நாட்டிற்கு நன்மை ஏற்படும் விதத்தில் நம்மை வழிநடத்துமாறும் அல்லாஹ்விடம் இரைஞ்ச வேண்டும்.
இது பித்னாவுடைய காலகட்டமாகும். மேலும் நம்முடைய செயல்களுக்கு ஒரு நாள் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் நாம் விளக்கம் சொல்லியாக வேண்டும். எனவே, நமது சொல், செயல் போன்ற அனைத்து விடயங்களிலும் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறியதோ பெரியதோ எதுவுமே அல்லாஹ்வின் செயலேட்டில் பதியப்படாமல் இருப்பதில்லை. தேர்தல் நாட்களில் ஒரே வீட்டில் வசிப்பவர்களும் வாதப் பிரதிவாதங்கள் செய்து பகைவர்கள் போல நடப்பதை நாம் காணலாம். மேலும் சிலவேளை சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதும் இன்று சகஜமாகியுள்ளது.
வாக்களிப்பது ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியமானதொரு உரிமையாகும். இதை வன்முறை மற்றும் பேதம் ஏற்படுத்துவதற்கான ஒரு காரணியாக நாம் ஆக்கிக்கொள்ளக் கூடாது. தேர்தல்களின்போது வாக்களிப்பதை ஒரு விசுவாசியுடைய அமானிதம் என்ற வகையைச் சேர்ந்த ஒரு புறக்கணிக்க முடியாத பொறுப்பென்றே இஸ்லாம் கருதுகின்றது. இந்நாட்டை நல்வழியில் செலுத்துவார் என தாம் நம்புவருக்கு தமது வாக்கை அளிக்க முஸ்லிம்கள் தவறக் கூடாது. அதை விடுத்து மற்றவர்களைத் தூற்றித் திரிவது விசுவாசிகளுக்கு பொருத்தமான செயலல்ல.
ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமை மானபங்கப்படுத்துவது பெரும் பாவமாகும். ஒரு முஸ்லிமின் மானம் கஅபாவை விடப் புனிதமானதாகும் என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக, அல்குர்ஆணின் கட்டளைகள் மற்றும் மாநபியின் உபதேசங்களின் படி ஒரு விசுவாசியின் மானத்தைப் பேணிக்காப்பதும் நாடு மற்றும் தமது சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய பங்களிப்பை குறைவின்றி வழங்குவதும் முஸ்லிம்களின் கடமையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply