ஏர் ஏசியாவின் 4 பெரிய பாகங்கள் கண்டுபிடிப்பு: இன்று உடல்கள் ஏதும் மீட்கப்படவில்லை

கடலில் விழுந்த ஏர்ஏசியா QZ8501 விமானத்தின் நான்கு பெரிய பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதற்கிடையே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90-க்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, கடலின் ஆழப்பகுதியில் தேடும் பணிகளுக்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நிலவரப்படி 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மேலும் 21 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 30 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆழ்கடல் பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ளும் அதிநவீன ரோவ் எனப்படும் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் கடலுக்குள் சென்று படங்களை எடுத்து வருகிறது. இந்த வாகனம், கடலுக்கடியில் கிடந்த ஏர் ஏசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்களை நேற்றிரவு கண்டுபிடித்தது.

இந்நிலையில், இன்றைய தேடலில் மேலும் இரண்டு பெரிய பாகங்களும் கண்டுபிடிக்கபட்டதாக தேடல் மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர் பாம்பாங் சொலிஸ்ட்யோ இன்றிரவு கூறினார்.

ஆழ்கடல் பகுதியில் இன்று அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் இன்றைய தேடுதல் வேட்டை சற்று பின்னடைவை சந்தித்ததாக குறிப்பிட்ட அவர், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை அலையின் உயரம் ஒன்றரை முதல் இரண்டு மீட்டருக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், நாளைய தேடுதல் வேட்டையில் மேலும் முன்னேற்றமான நிலைமை ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விமானத்தில் பயணித்த 162 பேரும் பலியாகி விட்டதாக அஞ்சப்படும் நிலையில் நேற்று வரை 30 உடல்களே மீட்கப்பட்டிருந்தன. இன்றைய தேடுதலில் பிரேதங்கள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply