சம்பந்தன் கூறியதை ஏற்க முடியாது: சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை தேசிய அரசாங்கத்தில் இணையமுடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈவிரக்கமற்ற இயக்கமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்றுள்ள பிரதான இரண்டு கட்சிகளாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் விடுதலைப் புலிகள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுக்க வேண்டுமெனக் கோரி புலிகளுக்கு பணம் கொடுத்தே மஹிந்த வென்றார் என ரணில் விக்கிரமசிங்கவும் ரணில் வெல்லதற்காகவே புலிகள் வாக்களிக்கவிடாது மக்களைத் தடுத்தனர் என்று மகிந்த ராஐபக்சவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைத் தற்போது கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.
இவ்வாறு புலிகள் இல்லாத நிலையில் அரசாங்கம் புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சர்வதிகாரிகளென கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அவ்வாறு இரண்டு பேரையும் ஒப்பிடவே முடியாது. தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் விடுதலைக்காக தேசிய இயக்கமாக கொள்கை அடிப்படையிலையே புலிகள் செயற்பட்டுவந்தனர். இந்நிலையில் சம்மந்தனின் கருத்தை ஏற்கமுடியாது.
இதே வேளையில் தற்பொதைய ஐனாதிபதி வேட்பாளர் மைத்திபால தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அமையப் போகும் ஆட்சியில் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் முண்டியடித்து வருகின்றனர்.
ஆனால் எம்மைப் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச சமூகமும் புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைக்க வேண்டும்.
இங்கு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும். ஆகக் குறைந்தது சமஷ்டித் தீர்வென்றாலும் உடனடியாக வழங்கவேண்டும். எமது நிலைமைகள் இவ்வாறிருக்கையில் அரசனான அரசாங்கத்தை நம்பி புரசனான சர்வதேச சமுகத்தைக் கைவிடுகின்ற நிலை எமக்கு வரக் கூடாது. ஆகவே நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply