ராஜபக்ஷ வெற்றிபெற்றால் மட்டுமே இந்த நாடு சுபீட்சமான நாடாக உருவாகும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றால் மட்டுமே இந்த நாடு  சுபீட்சமான நாடாக உருவாகும்.  இந்நிலையில் ஜனாதிபதியின் வெற்றியில் எங்களுக்கு எந்த சந்தேகமும்  இல்லை.  மிகப்பெரிய  வாக்குகள் வித்தியாசத்தில்  ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என்று    ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கும்  20 கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. இந்த நாட்டை பிரித்து துண்டாடுவதற்கு   சர்வதேச சக்திகள்  பாரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அந்த முயற்சிக்கு    மைத்திரிபால சிறிசேன தரப்பு துணைபோகின்றது  என்றும்  ஆதரவு வழங்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற  விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் பிரதிநிதிகள்   மேற்கண்டவாறு கூறினர்.

மக்கள்  ஐக்கிய முன்னணி,  லங்கா சம சமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை தேசிய சங்கம்,  இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி,  இலங்கை தேசிய  முன்னணி, இலங்கை தொழிலாளர் கட்சி,   ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி,  புதிய சிஹல உறுமய,   தேசிய சுதந்திர முன்னணி, பூமி புத்திர கட்சி, சிறிலங்கா  மக்கள் கட்சி,  முஸ்லிம் உலமா கட்சி, சிறிலங்கா கிறிஸ்தவ  காங்கிரஸ் கடசி, தேச விமுக்தி மக்கள் கட்சி,  ஐக்கிய இலங்கை பொது ஜன கட்சி மாற்றுக்குழு,   சிறிலங்கா முற்போக்கு மக்கள்  முன்னணி, முஸ்லிம் முற்போக்கு  முன்னணி,  ஐக்கிய இலங்கை மகா சபை,  தேசிய முன்னணி, இலங்கை முற்போக்கு முன்னணி,  சுபவாத அரசியல் அமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய   செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.   அந்தவகையில்   அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகள் சிலர்  தெரிவித்த கருத்துக்கள் வருமாறு

பிவித்துரு ஹெல உறுமய

பிவித்துரு ஹெல உறுமயவின் சார்பில்  உதய கம்மன்பில குறிப்பிடுகையில்

இந்த நாட்டின் உண்மையான  பொது வேட்பாளராக ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவே  காணப்படுகின்றார். அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு பல கட்சிகள்  இணைந்துகொண்டுள்ளன.    எமக்கிடையில்  கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்    நாம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். எனவே ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி நிச்சயமாகும் என்றார்.

பியசிறி விஜேநாயக்க

தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் பியசிறி விஜேநாயக்க கருத்து வெளியிடுகையில்

இம்முறை  தேர்தலில்  உள்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு  இடையில் போட்டி  இடம்பெறவில்லை. மாறாக   சர்வதேசத்துக்கும் இலங்கைக்கும்  இடையிலேயே போட்டி ஏற்பட்டுள்ளது.   அந்த சர்வதேச சக்திக்கு    உள்நாட்டில் சில தரப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியை தோற்கடிக்கவேண்டும் என்று  ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். காரணம்   ஜனாதிபதியை தோற்கடித்தால்தான்  இலங்கையில் ஈழத்தை  அமைக்கலாம்.    அதற்குத்தான்  முஸ்லிம் கட்சிகளையும் தமிழ்க் கூட்டமைப்பையும்    மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.

இந்தத்  தேர்தலில்  சதி முயற்சிக்கு அப்பால் சர்வதேச உபாயத்திட்டத்துக்காக  இலங்கை பயன்படுத்தப்படுகின்றது.   மைத்திரிபாலவின் இந்த பிரவேசம் திடீரென வரவில்லை. அவர்   நீண்டகாலமாக  இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.   தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் முரண்பட்டு  பேச்சுவார்த்தைகளை  கடந்த காலங்களில் நடத்திக்கொண்டிருந்தபோது   மைத்திரிபால அவற்றை குழப்ப முயற்சித்தார்.    அவ்வாறு    மைத்திரிபாலவின் செயற்பாடுகள்   அண்மைய காலங்களில் வித்தியாசமாகவே இருந்தன.  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும்    இந்த செயற்பாட்டை திட்டமிட்டு முன்னெடுத்துள்ளார் என்றார்.

மிலிந்த மொரகொட தலைமையிலான இலங்கை  தேசிய சங்கத்தின் பிரதிநிதி  ஆர்.ஏ.டி. சிறிசேன  குறிப்பிடுகையில்

ஆளும் கூட்டணியில் பல முரண்பாடுகள்  இருக்கலாம். ஆனால் அனைவரும்  தேசிய ஒற்றுமையை  முன்னிறுத்தியுள்ளனர்.   ஜனாதிபதி தேர்தல் என்பது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது  மாகாண சபை உறுப்பினர் பதவிபோன்றதல்ல.  மாறாக  நாட்டின் எதிர்காலம்  சம்மந்தப்பட்டதாகும். அந்தவகையில்    எமது ஜனாதிபதி  சிறந்தபலமான தலைவராக இருக்கின்றார்.    எனவே அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  வெற்றியுடன் நாடு சுபீட்சமடையும் என்றார்.

ஜனநாயக  இடதுசாரி  முன்னணியின் தலைவர்  வாசுதேவ நாணயக்கார  கருத்து வெளியிடுகையில்

ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி பல கட்சிகள் இணைந்துகொண்டுள்ளன.  அதேநேரம்  மக்கள் விரோத சக்திகளும் எதிரணியில் உள்ளன. எனினும்   மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.  ஆனால் இன்று  சில நாடுகள்   வேறு நாடுகளை  அடக்க முயற்சிக்கின்றன. அந்த முயற்சியில்  நாம் சிக்கிவிடக்கூடாது.    எவ்வாறெனினும்  ஜனாதிபதி  மஹிந்த  வெற்றிபெற்றால்  மட்டுமே இந்த நாடு சுபீட்சமடையும் என்றார்.

மக்கள் ஐக்கிய  முன்னணியின்  உப தலைவர்  சோமவீர சந்திரசிறி  குறிப்பிடுகையில்

எமது நாட்டின் ஒற்றையாட்சி முறைமை  மிகவும் முக்கியமானதாகும்.   அந்தவகையில்    1983  ஆம் ஆண்டிலிருந்து எமது கட்சி  ஒற்றையாட்சிக்காக  முன்னின்று வருவதுடன்  2005 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்க ஆதரவு வழங்கிவருகின்றது.

ஆனால் இன்று  மிகப்பெரிய பயங்கரவாதியான  பிரபாகரனை    சந்திரிகா குமாரதுங்க    மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியுள்ளார்.   அது தொடர்பில் நாங்கள் கவலையடைகி்ன்றோம்.  முன்னாள் ஜனாதிபதி    ஜே.ஆர். ஜயவர்த்தன காலத்தில்  இந்திய   இராணுவம் இலங்கை வந்ததுடன்     அரசியலமைப்புக்கு புதிய  திருத்தம்கொண்டுவந்து நாட்டை குழப்பியது.  ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டை மீண்டும் ஒன்றிணைத்தார்.    இநநிலையில் தற்போது ஜனாதிபதி மீண்டும்   மக்கள் முன் வந்துள்ளார். அவரை நாட்டு மக்கள்  20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைக்கொண்டு வெற்றிபெறவைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply