ராஜபக்சே-சிறிசேனா வெற்றி யாருக்கு?: இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு
இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) பகலில் முடிவு தெரியும். இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அங்கு புதிய அதிபரை தேர்ந்து எடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. தற்போதைய அதிபர் ராஜபக்சேவின் (வயது 69) பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருந்த போதிலும், அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தார். மேலும் தான் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்திலும் அவர் திருத்தம் செய்தார்.மீண்டும் அதிபர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் சுதந்திரா மக்கள் கட்சியின் சார்பில் ராஜபக்சே களம் இறங்கினார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக 63 வயதான மைத்ரிபால் சிறிசேனா போட்டியிடுகிறார். இவருக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
சிறிசேனா, ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர். ராஜபக்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, மந்திரிசபையை விட்டு வெளியேறினார். முன்னாள் அதிபர் சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அதிபர் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், ராஜபக்சேவுக்கும் சிறிசேனாவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
சுமார் 2 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் 1 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 20 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். இலங்கை மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் சிங்களர்கள். தமிழர்கள் 11 சதவீதமும், முஸ்லிம்கள் 9 சதவீதமும் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்களான ராஜபக்சே, சிறிசேனா இருவருமே பெரும்பான்மையான சிங்கள வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
ராஜபக்சே பதவியில் இருப்பதால், அவர் வெற்றி பெறுவதற்காக வாக்குப்பதிவின் போது மோசடிகள் நடைபெறலாம் என்றும், எதிர்க்கட்சியினர் மிரட்டப்படலாம் என்றும் புகார் கூறப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை பார்வையிட வெளிநாடுகளைச் சேர்ந்த 70 பேர் உள்பட 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
நாடு முழுவதும் 12 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஓட்டுப்பதிவு இலங்கை நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக வந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டனர்.
அதிபர் ராஜபக்சே தனது சொந்த ஊரான ஹம்மன்தோட்டாவில் உள்ள மெதமுலனா பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று ஓட்டுப் போட்டார். எதிர்க்கட்சி வேட்பாளர் சிறிசேனா பொலனருவா ஓட்டுச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கொழும்பு பல்கலைக்கழக சாலையில் உள்ள மத்திய கல்லூரி வாக்குச்சாவடியிலும், வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கொழும்பு நகரில் உள்ள சர்ச்சீன் வாக்குச்சாவடியிலும் ஓட்டுப் போட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஆல்வாய் என்ற இடத்தில் ஒரு வாக்குச்சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. இதனால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. மற்றபடி நாடு முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. ஓட்டுச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் வன்முறை சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சியிலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகம் வாழும் பதுளை பகுதியிலும் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. கொழும்பு நகரிலும் வாக்குப்பதிவு மும்முரமாக நடந்தது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 60 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 74.78 சதவீதமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 63 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் 68.52 சதவீதமும், மட்டக்களப்பில் 60.3 சதவீதமும், கண்டியில் 75 சதவீதமும், கொழும்பு, அனுராதபுரம் மாவட்டங்களில் தலா 76 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 68 சதவீதமும், திரிகோணமலையில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்சேவின் சொந்த ஊரான ஹம்மன்தோட்டாவில் 79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பொதுவாக நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்ததாக, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். நாடு முழுவதும் பதிவான வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 70 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
(கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 74.49 சதவீத வாக்குகள் பதிவாயின.)
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் 1,115 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை பார்வையிடுவதற்காக 300 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் 304 மையங்களில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) பகலில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்சே 3-வது முறையாக அதிபர் ஆவாரா? அல்லது அவருக்கு நண்பராக இருந்து பின்னர் அரசியல் எதிரியாக மாறிய சிறிசேனா அதிபர் நாற்காலியில் அமர்வாரா? என்பது அப்போது தெரிந்து விடும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply