ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக ‘கே.பி.’ என்று அழைப்பார்கள். குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர். 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி குமரன் பத்மநாதன் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது அவர் அரசு ஆதரவாளராக மாறினார்.
இதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்த குமரன் பத்மநாதன் அங்கிருந்தபடியே போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
இதனால், குமரன் பத்மநாதனை விசாரணைக்காக தங்கள் வசம் ஒப்படைக்கும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. எனினும் இலங்கை அரசு அவரை இந்தியா வசம் ஒப்படைக்கவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், குமரன் பத்மநாபன் நேற்று கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக இலங்கை அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி அதிபர் சிறிசேனா கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ரஜிதா சேனரத்னா கூறும்போது, ‘‘விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் அறையில் இருந்து குமரன் பத்மநாதன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர் தப்பி ஓடியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
எனினும் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றார் என்ற தகவல் தெரிய வரவில்லை.
சிறிசேனா தலைமையிலான புதிய அரசு தன்னை கைது செய்து விசாரணைக்காக இந்தியா வசம் ஒப்படைக்கும் என்று கருதி இலங்கையில் இருந்து குமரன் பத்மநாதன் தப்பியோடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply