தேசிய பட்டியல் மூலம் அமைச்சரவையில் மனோ?
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அமைச்சரவையில் இடம்பெறவைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப் படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக கட்சி தலைவர்களாக இருக்கும் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சரவையில் நியமிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.முஸ்லிம் எம்.பிக்களும், முன்னாள் அமைச்சர்களுமான ரிசாத் பதூதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் ஐ.தே.க.வின் செயலாளரும் எம்.பி.யுமான கபீர் ஹஷிம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாக நியமிக்கப்படும் முடிவு ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தால் எடுக்கப்பட்டு விட்டது.
முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்பாகவும் ஆராயப்படுவருவதாக கூறப்படும் நிலையில் முன்னாள் பிரதியமைச்சர்களும், மலையக எம்.பிக்களுமான பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் அமைச்சரவையில் உள்வாங்கப்படலாம் என இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை. ஐ.தே.க.வின் தேசிய பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே அவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவையில் இடம் பெற முடியும். பொது எதிரணியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்பட்ட எதிரணி எதிர்ப்பு இயக்கத்தில் நீண்டகாலமாக இடம்பெற்ற கட்சித்தலைவர் என்ற அடிப்படைகளில், மனோ கணேசனை பாராளுமன்றத்துக்குள் உள்வாங்குவதற்காக ஐ.தே.க. தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரை இராஜினாமா செய்விக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.
ஐ.தே.க.வின் தேசிய பட்டியல் மூலம், தற்போதைய பாராளுமன்றத்துக்கு, அனோமா கமகே, ஹர்ஷா டி சில்வா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, டி. எம். சுவாமிநாதன், ஆர். யோகராஜன், ஏரான் விக்கிரமரட்ன ஆகியோருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஹசன் அலி மற்றும் அஸ்லாம் ஆகியோரும் 2010ஆம் வருட பொது தேர்தலையடுத்து நியமிக்கப்பட்டனர்.
தற்சமயம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வர உள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் இடம்பெற தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் மறுத்துவிட்டன என்றும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று கூட்டமைப்பு அரசுக்கு கூறியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply