சிறுபான்மையினரின் பிரச்சினையைத் தீர்க்க தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் :ரிசாத் பதியுதீன்
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு முதலில் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்கள் ஒன்று படவேண்டும்.இதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீமுடனும் விரைவில் பேச்சுவார்தை நடத்தவுள்ளேன் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டுமக்கள் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். அரசில் இணைந்துள்ள பல்வேறு கொள்கையுடையோர் அனைவரும் ஒரு மித்த கருத்துடன் இந்நாட்டில் மீண்டும் பொதுபலசேனா போன்ற அமைப்புகள் மூலம் முஸ்லிம்களுக்கு துன்பகரமான சூழ்நிலை ஏற்படாது பாதுகாக்கப்படும்.
கடந்த காலங்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியை முஸ்லிம்கள் பிழையாக பார்த்திருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைப்பற்றி தவறாக பிரசாரம் செய்திருந்தாலும் அவர்களும் எம்முடன் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். எங்களுக்குள் நல்லாட்சிக்காக நல்லுறவு உருவாகியிருக்கிறது. வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்று பட்டிருக்கிறோம்.
இதே போன்று பல கட்சிகள் அமைப்புகள் கைகோர்த்துள்ளன. அனைத்தும் நல்லாட்சி, சகவாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றையே இலக்காகக் கொண்டுள்ளன.
தமிழ், முஸ்லிம் அரசியில் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவது சதிசெய்வதற்காகவல்ல. நல்லாட்சியையும் சகவாழ் வினையும் உருவாக்குவதற்கே. வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்வதற்கு நாம் உடன்பாட்டுக்கு வரவுள்ளோம்.
புதிய அரசாங்கமும் தனது கடமைகளைத் தொடர்ந்து அவற்றில் வெற்றியீட்டுவதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் சமூகமும் பூரண ஒத்துழைப்பினை நல்கும். நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வுகள் இனி ஒரு போதும் ஏற்படாதவாறு நல்லாட்சி நடைபெற நாங்கள் என்றும் அரசுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளிக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply