இஸ்லாமுக்கு எதிரான ஊர்வலம்: ஜெர்மனியில் தடை

ஜெர்மனியின் டிரெஸ்டென் நகரில் இஸ்லாமியக் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாரந்தோறும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு திங்கள்கிழமை தடை விதிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியில் குடியேற்ற விதிமுறைகளைக் கடுமையாக்கக் கோரி, “இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்’ (பெகிடா) என்ற வலதுசாரி அமைப்பு அந்த நாட்டின் டிரெஸ்டென் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரந்தோறும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல் ஊர்வலத்துக்குள் ஊடுருவி, பெகிடா அமைப்பின் முக்கியத் தலைவர்களைக் கொல்ல சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினரை உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை நடைபெறவிருந்த அந்த ஊர்வலத்துக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

இதுகுறித்து டிரெஸ்டென் காவல் ஆணையர் டீட்டர் குரோல் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஊர்வலத்தின்மீது தாக்குதல் நிகழ்த்துவதற்கான சதித் திட்டம் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் வந்துள்ளன.

பெகிடா அமைப்பின் தலைவர்களையும், அங்குள்ள மக்களையும் கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும், தாக்குதலின் தன்மை குறித்தும், தாக்குதலை நிகழ்த்தவிருக்கும் பயங்கரவாதிகள் குறித்தும் எங்களுக்குத் தகவல் இல்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply