சுதந்திர தின விழாவுக்கு இடதுசாரிகள் முட்டுக்கட்டை : பிரதமர்
எமது நாட்டின் தேசிய சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ முட்டுக்கட்டையாக நிற்கவில்லை. மாறாக சுதந்திரக் கட்சியோடு ஒட்டிக்கொண்டிருக்கின்ற இடது சாரிகளே சுதந்திர தின விழாவை அனுஷ்டிக்க வேண்டாம் எனக் கூறி முட்டுக்கட்டை போடுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக உடனடி விவாதம் ஒன்று அவசியம் என்று எதிர்க்கட்சியினர் சபையில் குழப்பம் விளைவித்தனர்.இதனால் சபையில் கூச்சலும் நிறைந்து காணப்பட்டது.
ரணில்
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் கோரும் விதத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கோ அல்லது பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கோ இயலுமை இல்லாதுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார்.
எனினும் முன்னாள் அமைச்சரான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, அத்தாவுட செனவிரட்ன, விமல் வீரவன்ச மற்றும் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் இன்றைய தினமே (நேற்று) விவாதம் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எதிர்வரும் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி விவாதம் ஒன்றுக்கு இணங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது நாட்டின் சுதந்திர தின விழா எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்ற வளாக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இராணுவப் படையணியின் ஒத்திகை நிகழ்வுகள் இரண்டாம் திகதி இடம்பெறவிருக்கின்றன. எனவே இதற்கு இடமளிக்க வேண்டும். அத்துடன் மூன்றாம் திகதி போயா விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது.
நான்காம் திகதி சுதந்திர தினம் என்பதால் ஐந்தாம் திகதி மேற்குறிப்பிட்டட விடயம் தொடர்பில் விவாதிக்க முடியும். அதற்கு நாமும் தயாராகவே இருக்கிறோம் என்றார். இதனையடுத்து எழுந்த தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற வளாகம் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அத்துடன் பாராளுமன்றத்தை விட படையினர் இரண்டாம் பட்சமே. பாராளுமன்ற நடவடிக்கைகளின் நிமித்தம் படையினரின் அன்றைய தின நடவடிக்கைகளை சற்று தாமதிக்கச் செய்ய முடியும் என்றார்.
வாசு
அத்துடன் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்;
பாராளுமன்ற வளாகப் பாதைகள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தால் மாதிபெல பிரதேசத்தினூடான பாதையை பயன்படுத்த முடியும். எனவே இரண்டாம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி எமக்கு விவாதத்தைப் பெற்றுத் தாருங்கள் என்றார்.
பிரதமர்
இதன் போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராணுவப் படையணியின் ஒத்திகை நிகழ்வுகளின் போது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், அதிகாரிகளின் வருகையும் மாதிவெல பாதையூடாகவே இடம்பெறவுள்ளன.
அத்துடன் அன்றைய தினம் பாதைகள் மூடப்படுவதுடன் வாகன நெரிசல்களுக்கும் இடமுண்டு. மேலும் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பாராளுமன்ற வளாகம் வரையான வழிப்பாதை மூடப்பட்டிருக்கும். இவற்றைக் கருத்திற் கொண்டே இரண்டாம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இயலுமை இல்லை என்பதை இங்கு கூறுகிறேன்.
இலங்கையின் சுதந்திர தினமானது டி.எஸ். சேனாநாயக்க மற்றும் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க காலப் பகுதியிலேயே கிடைக்கப் பெற்றது. அந்த வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ தடையாக இல்லை. மாறாக இடதுசாரிக் கட்சியினரே முட்டுக் கட்டை போடுகின்றனர். சுதந்திர தினக் கொண்டாட்டம் வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.இதற்கு மேல் எதுவும் என்னால் கூறுவதற்கு இல்லை. எதிர்வரும் ஐந்தாம் திகதி விவாதத்தைப் பெற்றுத் தர முடியும். நாமும் தயாராக இருக்கிறோம் என்றார். இதன் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply